Last Updated : 10 Jun, 2016 09:19 AM

 

Published : 10 Jun 2016 09:19 AM
Last Updated : 10 Jun 2016 09:19 AM

கர்நாடகாவில் காதலிக்கு ஆம்புலன்ஸில் தாலி கட்டிய காதலர்

கர்நாடகாவில் சாதி பேதங்களை யும் பல்வேறு சோதனைகளையும் கடந்து, முதுகெலும்பு முறிந்த நிலையில் இருந்த காதலிக்கு ஆம்புலன்ஸில் வைத்து தாலி கட்டினார் அவரது காதலர்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் செல்லெக்கெரே கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி ( 26). இவர் அங்குள்ள‌ காற்றாலை நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் பி.ஜி.கெரே கிராமத்தை சேர்ந்த நர்ஸிங் கல்லூரி மாணவி நேத்ராவதியை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், குருசாமி - நேத்ராவதி காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

இதனால் காதலர் இருவரும் சித்ரதுர்காவில் உள்ள முருகராஜேந்திர மடாதிபதியிடம் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து ராஜேந்திர மடாதிபதி இரு குடும்பத்தாரையும் அழைத்து பேசியதையடுத்து, இரு குடும்பத்தாரும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர்.

கடந்த 23-ம் தேதி குருசாமியும், நேத்ராவதியும் சித்ரதுர்கா மலை மேல் அமைந்துள்ள கோட்டைக்கு சென்றுள்ளன‌ர். மலையுச்சியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, நேத்ராவதி எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்ததில் அவரின் முதுகெலும்பு முறிந்தது.

இதையடுத்து நேத்ராவதி பெங்களூரு நிமான்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையை தொடர்ந்து அவருடைய உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப் பினும் முழுமையாக குணமடைவதற்கு ஓராண்டு வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் குருசாமி யின் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். இதற்கு குருசாமி மறுப்பு தெரிவித்து, உடனடியாக நேத்ராவதியை கைப் பிடிப்பதில் உறுதியாக இருந்தார்.

சீர்திருத்த திருமணம்

கடந்த 5-ம் தேதி பெங்களூரு மருத்துவமனையில் இருந்து தனது காதலியை சித்ரதுர்கா முருகராஜேந்திர மடத்துக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றார் குருசாமி. அங்கு 22 ஜோடிகளுக்கு சீர்திருத்த திருமணம் நடைபெற இருந்தது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன், மடாதிபதி முன்னிலையில் ஆம்புலன்ஸில் வைத்து குருசாமி நேத்ராவதியின் கழுத்தில் தாலி கட்டினார். ஆம்புலன்ஸில் நடை பெற்ற திருமணத்தை கண்டு, குடும்பத்தாரும், உறவினர்களும் நெகிழ்ந்தனர். காதல் கணவரை கைப்பிடித்த மகிழ்ச்சியில் படுத்த படுக்கையாக இருந்த நேத்ராவதி யும் கண்கலங்கினார். திருமணத் துக்கு பிறகு நேத்ராவதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆம்புலன்ஸில் நடந்த இந்த திருமணத்தின் நெகிழ்ச்சியான புகைப்படங்கள், வீடியோ ஆகியவை ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மணமக்களின் கண்களில் வழியும் கண்ணீரில் உண்மையான காதல் தெரிகிறது என சமூக வலைதளத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களின் அன்பையும், வாழ்த்துகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x