Last Updated : 17 Apr, 2015 02:17 PM

 

Published : 17 Apr 2015 02:17 PM
Last Updated : 17 Apr 2015 02:17 PM

கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழர்கள் தாய்மொழியை தவறாமல் குறிப்பிட வேண்டுகோள்

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழர்கள் தங்களது தாய்மொழியை தவறாமல் குறிப்பிட வேண்டும் என கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் முதல் முறையாக கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 11-ம் தேதி தொடங்கியது. வருகிற 30-ம் தேதி வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்பில், சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் பொருளாதார நிலை குறித்த விபரங்கள் கண்டறியப்பட உள்ளது. எனவே கர்நாடக தமிழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.இராசன், 'தி இந்து' விடம் கூறியதாவது:

க‌ர்நாடகத்தில் தமிழர்கள் பரவலாக வாழ்ந்தாலும் பெங்களூரு, கோலார், சிவமொக்கா, மைசூரு உள்ளிட்ட் மாவட்டங்களில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கின்றனர். பெங்களூருவில் உள்ள குடிசைப் பகுதிகள் மற்றும் கோலார் தங்கவயலில் வாழும் தமிழர்கள் பொருளாதார அளவில் பின் தங்கியுள்ளனர். கர்நாடக அரசின் பெரும்பாலான நலத்திட்டங்கள் தமிழர்களை சென்றடையாத சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், தற்போது நடந்துவரும் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழர்கள் தங்களது உரிமையை பெற உதவும் என நம்புகிறேன். ஏனென்றால் இந்த கணக்கெடுப்பில் மக்களின் சாதி, மதம், மொழி, வயது, வருமானம் உட்ப‌ட 55 கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தாய்மொழி குறித்த இடத்தில் தமிழர்கள் அனைவரும் தங்களது தாய்மொழியான தமிழை குறிப்பிட வேண்டும்.அவ்வாறு குறிப்பிட்டவுடன் அதனை கணக்கெடுப்பாளர் பதிவு செய்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஏனென்றால் தமிழர்கள் பெருமளவில் தாய்மொழியை பதிவு செய்தால் தான் கர்நாடகத்தில் மொழி சிறுபான்மையினருக்கான உரிமையை பெற முடியும். தமிழர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எதிர்காலத்தில் அரசு திட்டங்கள் வகுக்கும். ஆனால் தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்ட கர்நாடக அரசும், கன்னட அமைப்புகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

இந்த சூழலில் தமிழர்கள் தங்களது தாய்மொழியை தெளிவாக குறிப்பிட்டால் எதிர்க்காலத்தில் மொழி சிறுபான்மையினருக்கான அங்கீகாரம் கிடைக்கும். அதே நேரத்தில் கர்நாடகத்தில் உள்ள மொத்த தமிழர்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக அறியவும் முடியும்'' என்றார்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x