Last Updated : 25 Oct, 2016 05:05 PM

 

Published : 25 Oct 2016 05:05 PM
Last Updated : 25 Oct 2016 05:05 PM

ஏ தில் ஹே முஷ்கில்- ராணுவ நலநிதிக்கு ரூ.5 கோடி அளிக்க கோருவதற்கு தேவேந்திர பட்நாவிஸ் எதிர்ப்பு

‘‘ஏ தில் ஹே முஷ்கில் திரைப்படத்தை வெளியிட, ராணுவ நலநிதிக்கு படக்குழுவினர் ரூ.5 கோடி நன்கொடை வழங்க வேண்டும் என்ற மகாராஷ்டிர நவநிர்மாண் சபை நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்தேன்’’ என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த ‘ஏ தில் ஹே முஷ்கில்’ திரைப்பட வெளியீட்டு விவகாரத்தில் தயாரிப்பாளர்களுக்கும், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவுக்கும் இடையே தரகராக செயல்பட்ட விவகாரத்தில் மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கடும் விமர்சனத்தை சந்தித்தார்.

இந்தச் சூழலில் ராணுவ நலநிதிக்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘திரைப்படத்தை வெளியிடுவதற்கு தாக்கரே மூன்று நிபந்தனைகளை முன் வைத்தார். அதில் இரண்டு நிபந்தனைகளுக்கு எந்த ஆட்சேபமும் எழவில்லை. ராணுவ நலநிதிக்கு ரூ.5 கோடி நன்கொடையாக வழங்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது தான் நான் குறுக்கிட்டு எதிர்ப்பு தெரிவித்தேன். இதற்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புக் கொள்ளக்கூடாது என்றும் தெளிவாக கூறினேன்.

ராணுவத்துக்கு தாமாக முன்வந்து நன்கொடை அளிப்பது தான் சரியாக இருக்கும் என்றும் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து வழங்கக் கூடாது என்றும் கூறினேன். ஆனால் தயாரிப்பாளர்கள் அதை கேட்கவில்லை. ரூ.5 கோடி வழங்க ஒப்புக் கொண்டனர்’’ என்றார்.

படவெளியீட்டு விவகாரத்தில் தரகராக செயல்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர், ‘‘தாக்கரேவின் எச்சரிக்கைக்கு அடிபணியாமல் மற்றொரு வழியிலும் திரைப்படத்தை வெளியிட்டிருக்க முடியும். அதாவது திரையிடப்படும் அனைத்து திரையரங்குகள் முன்பாகவும், ஆயிரக்கணக்கான போலீஸாரை குவித்து போராட்டக்காரர்களை கைது செய்யலாம். இதனால் தீபாவளி கொண்டாட்ட எண்ணத்தில் இருக்கும் போலீஸாருக்கு பண்டிகை கால மகிழ்ச்சி பறிபோனது என்ற குற்றச்சாட்டை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவே தான் சுமூகமாக தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தினேன். நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்றார்.

இந்த விவகாரத்தில் பட்நாவிஸ் குறுக்கிட்டு பாகிஸ்தான் நடிகர்களுக்கு சாதகமாக முடிவு எடுக்கும் வகையில் நடந்து கொண்டார் என சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பட்நாவிஸ் கூறும்போது, “ஹுரியத் போன்ற பிரிவினைவாதிகளுடனோ அல்லது நக்சலைட்டுகளுடனோ நம் அரசு அமைதிக்காக பேச்சு வார்த்தை நடத்துவதில்லையா? இது சிறிய விவகாரமாக இருந்தாலும் பேச்சு வார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண்பதில் தவறென்ன இருக்கிறது, இதை ஏன் இவ்வளவு கசப்புடன் விமர்சிக்க வேண்டும். வெற்றிகரமான தலையீடு சிலருக்கு ஏமாற்றமாக இருந்துள்ளது போலும். இத்தகைய பேச்சு வார்த்தைகளின் பின்னால் எந்த ஒரு அரசியல் நோக்கமும் இல்லை” என்றார் பட்னாவிஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x