Last Updated : 24 Oct, 2014 09:57 AM

 

Published : 24 Oct 2014 09:57 AM
Last Updated : 24 Oct 2014 09:57 AM

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது ஏன்?- ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பேட்டி

நமது ராணுவ வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பி, தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காகத்தான் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது என்று ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலும், அகில இந்திய ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவருமான சத்பீர் சிங் கூறியுள்ளார்.

தனது 17-வது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற தொடங்கிய சத்பீர் சிங், மேஜர் ஜெனரல் வரை பதவி வகித்து கடந்த 2003-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவரை நொய்டாவில் சந்தித்து, காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக பேசினோம்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது ஏன்?

பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு. தனது தவறான கொள்கைகளால் அந்நாடு முன்னேற முடியாமல் தோல்வியை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு போதிய பொருளாதார வளம் இல்லை. எனவே, மிகக் குறைந்த செலவில் இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தி நம்மை மிரட்டுகிறது. அதே போல, குறைந்த செலவில் போரிடும் வகையில் தனது நாட்டில் உள்ள தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவுக்கு அனுப்புகிறது. இத்துடன் நம் நாட்டில் உள்ள சில இளைஞர்களை வன்முறைக்கு தூண்டி இங்கு குழப்பத்தை விளைவிக்க முயல்கிறது. இதற்காக, அது நமது பிரிக்க முடியாத அங்கமான காஷ்மீரை குறி வைக்கிறது.

இதுவரை இல்லாத வகையில் பாகிஸ்தான் கடும் தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகிறதே?

அது உண்மைதான். இந்தியா - பாகிஸ்தான் போர் மற்றும் கார்கில் போருக்கு பின் இந்த அளவுக்கு எல்லையில் துப்பாக்கிச் சூடு நடந்தது கிடையாது. பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் மத்தியில் இருக்கும் மதிப்பை சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தின்போது நடைபெற்ற சம்பவத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியதை யாரும் கவனிக்கவில்லை. நமது பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை பல்வேறு நாடுகளின் அதிபர்கள் கூர்ந்து கவனித்தனர்.

இருநாட்டு எல்லையில் இதற்கு முன்பு அமைதி நிலவியது உண்டா?

நம் நாட்டின் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் எல்லை என்பது இரண்டு வகையானது. அதில் ஒன்று, ’இன்டர்நேஷனல் பார்டர்’ எனப்படும் இருநாடுகளுக்கு இடையே நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச எல்லைக்கோடு. மற்றொன்று, ’லைன் ஆப் கன்ட்ரோல் (எல்.ஓ.சி)’ எனப்படும் இருநாடுகளுக்கு இடையே போர் மூண்டதால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் எல்லைக்கோடு.

முந்தைய காலங்களில் எல்லைப் பகுதியில் இருநாடுகளின் விவசாயிகளும் விதைகளையும், உரங்களையும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து வாங்கிக் கொண்டனர். கால்நடை விற்பனையில் ஈடுபட்டனர். இருநாட்டு எல்லைகளில் உள்ள கோயில், குருத்துவாரா மற்றும் தர்காக்களில் இருநாட்டவர்களும் குறிப்பிட்ட நாட்களில் வந்து சென்று கொண்டிருந்தனர். அவ்வளவு ஏன், இன்று கூட துப்பாக்கிச் சூடு இல்லாத காலங்களில் இருநாடுகளின் போர்வீரர்கள் தங்களுக்குள் பீடி, சிகரெட்டுகளை கொடுத்து வாங்கிக் கொள்வது உண்டு.

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது என்று இந்திய அரசு கூறியுள்ளதே?

ஒருபுறம் நம்மிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டு, மறுபுறம் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் நட்பு பாராட்டி பாகிஸ்தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம், எல்லையில் தாக்குதல் நடத்துகிறது.

அமைதி நிலவும் போது தான் இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்த முடியும். அதனால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது என்று நமது அரசு கூறியுள்ளது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால், இப்பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?

இப்பிரச்சினைக்கு தீர்வு காண, போரில் ஈடுபடுவது கடைசி முயற்சியாகும். நமது நாட்டில் ஜனநாயக அரசு உள்ளது. பல துறைகளில் சிறந்து விளங்கி வருகிறோம்.

கல்வி, அறிவியல், தொழில், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் மேலும் வலிமை பெற்று சிறந்து விளங்கினால், அவர்களாக நம்மிடம் முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தும் நேரம் வரும். அதற்காக, அரசுடன் இணைந்து நாம் செயல்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x