Last Updated : 26 Sep, 2016 08:47 PM

 

Published : 26 Sep 2016 08:47 PM
Last Updated : 26 Sep 2016 08:47 PM

எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கையில் பாக். பங்கை நிரூபிக்க நேரடி சாட்சியம் உள்ளது: ஐநா-வில் சுஷ்மா பேச்சு

காஷ்மீர் மனித உரிமை பற்றி பேசுபவர்கள் முதலில் தங்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பலுசிஸ்தானில் ஒடுக்குமுறையின் மோசமான வடிவம் வெளிப்படுத்தப்படுகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியுள்ளார்.

இந்தியா சார்பில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் பங்கேற்ற அவர் பாகிஸ்தான் எழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியதாவது:

ஐ.நா.வால் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் (மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா தீவிரவாத தலைவர் ஹபீஸ் சையத்தை குறிப்பிட்டு) சுதந்திரமாக உலாவும் நாடுகளும் (பாகிஸ்தான்) நமக்கு மத்தியில் இருக்கத் தான் செய்கின்றன. அந்த நாட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து தீவிரவாத மொழியை தான் பேசுகின்றனர். தீவிரவாதத்தை உருவாக்கி, வளர்த்து பின்னர் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். தீவிரவாதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் இத்தகைய நாடுகளை அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.

மனித உரிமை மீறல்கள் பற்றி பிற நாடுகளை குற்றம் சுமத்துபவர்கள், முதலில் தங்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பலுசிஸ்தான் உட்பட சொந்த நாட்டிலேயே மோசமான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கனவு ஒருபோதும் பலிக்காது. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம். எப்போதும் இந்தியாவுடனேயே இருக்கும். தீவிரவாத தாக்குதல்கள் மூலம் காஷ்மீரை அடைந்து விடலாம் என திட்டமிட்டால், அது ஒருபோதும் வெற்றி பெறாது.

(நவாஸ் ஷெரீப்பை குறிப்பிட்டு) முன் நிபந்தனைகள் விதித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததாக இந்த சபையில் குற்றம்சாட்டப்பட்டது. அது என்ன முன் நிபந்தனை? இந்தியா விதித்தா? எங்கள் அரசு பதவியேற்கும் விழாவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது விதிக்கப்பட்டதா? பிரதமர் நரேந்திர மோடி காபூலில் இருந்து லாகூர் சென்றபோது விதித்தாரா?

பதான்கோட், உரி என அடுத்தடுத்து இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அதற்கு பிரதிபலனாக பாகிஸ்தானுடன் நட்பு ரீதியில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன் வந்ததே தவிர, எந்த நிபந்தனை அடிப்படையிலும் அல்ல.

ரம்ஜான் பண்டிகையின்போது பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவர்களது கிரிக்கெட் அணி வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தோம். இவை எல்லாம் முன் நிபந்தனை அடிப்படையிலானதா?

பருவமாற்றம்

பருவ மாற்ற விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து முக்கிய பங்காற்றும். அதே சமயம் வளர்ந்த நாடுகளும் நிதி மற்றும் தொழில்நுட்ப திறனை பரஸ்பரம் பரிமாற்றி தங்களது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற முன் வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையில் ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு தாக்க பதிலடி தரும் வகையில் பேசிய சுஷ்மா ஸ்வராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தார். தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில், ‘‘ஐ.நா. பொது சபையில் சர்வதேச பிரச்சினைகள் குறித்து தீர்க்கமாகவும், உறுதியாகவும், உரையாற்றிய சுஷ்மா ஸ்வராஜுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x