Last Updated : 27 Jan, 2015 06:12 PM

 

Published : 27 Jan 2015 06:12 PM
Last Updated : 27 Jan 2015 06:12 PM

எனது பெயரை ஒபாமா குறிப்பிட்டதில் பெருமை கொள்கிறேன்: ஷாருக்கான்

இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா மத நல்லிணக்கம் மற்றும் சம உரிமை குறித்து பேசும்போது தனது பெயரை குறிப்பிட்டதை பெருமையாக கருதுவதாக இந்தி நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஷாருக்கான் கூறும்போது, "அமெரிக்க அதிபர் ஒபாமா மத நல்லிணக்கம் மற்றும் சம உரிமை குறித்து பேசும்போது எனது பெயரை குறிப்பிட்டதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். ஆனால், அவருக்காக என்னால் பாங்கரா டான்ஸ் ஆட முடியாமல் போனது. அடுத்த முறை நிச்சயம் அவருக்காக 'சய்ய சய்யா' பாடலுக்கு நடனமாடுவேன்" என்றார்.

இந்திய குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று டெல்லி டவுன் ஹாலில், 'இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கக் கூடிய எதிர்காலம்' (India and America: The Future We Can Build Together) என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது இந்தியா குறித்து தனது பார்வையில் பலதரப்பட்ட விஷயங்களை அவர் பேசினார்.

இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள மதச் சுதந்திரம் குறித்து பேசிய ஒபாமா, "ஒரு தனிநபர் தான் விரும்பும் மதத்தை, கொள்கையை பயமின்றி, பாகுபாடின்றி பின்பற்ற உரிமை இருக்கிறது. மத, இன, நிறப் பாகுபாடுகள் நம்மைப் பிரித்தாளாமால் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஷாருக்கான், மேரிகோம், மில்காசிங், கைலாஷ் சத்யார்த்தி இவர்கள் அனைவரது வெற்றியையும் சமமாக கொண்டாட வேண்டும். அவர்கள் மதம், நிறம் சார்ந்த பேதங்கள் கூடாது" என்றார்.

ஷாருக்கானின் பெயரை குறிப்பிடும்போது, அவரது 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே' படத்தில் இடம்பெற்ற 'செனோரிட்டா, படே படே தேஷோன் மெய்ன்...' என்ற வசனத்தை குறிப்பிட்டு ஒபாமா பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x