Last Updated : 18 Feb, 2017 08:45 AM

 

Published : 18 Feb 2017 08:45 AM
Last Updated : 18 Feb 2017 08:45 AM

எந்த சிறப்பு அறையும் வழங்கப்படவில்லை: நாட்டுக்காக போராடி சசிகலா சிறைக்கு வரவில்லை - கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் கோபம்

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அவர் எப்படி இருக்கிறார், என்னென்ன வசதி கள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரு கின்றன. இதுவரை அதிகாரப் பூர்வமான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்திய நாராயண ராவ் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் எப்படி நடந்துக்கொள்கிறார்?

நன்றாக இருக்கிறார். மற்ற கைதிகளுக்கு உணவு வழங் கப்படும் நேரத்தில் அவருக் கும் உணவு வழங்கப்படுகிறது. பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக காணப்படுகிறார்.

சசிகலாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின் றன? ஏதேனும் சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறதா?

என்னைப் பொறுத்தவரை எல்லா கைதிகளும் குற்றவாளிகள் தான். எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் காலையில் புளி சாதம், உப்புமா, அவலக்கி (அவலில் சமைக்கப்பட்ட சாதம்), சித்ரன்னா (எலுமிச்சை சாதம்) உள்ளிட்டவையும், மதியத்தில் கேழ்வரகு களி, சோறு, சப்பாத்தி, இரவில் சப்பாத்தி, களி ஆகியவை வழங்கப்படுகின்றன. வாரத்திற்கொரு முறை மட்டனும், சிக்கனும் வழங்கப்படும்.ஒரு நாளைக்கு ஒரு முறை டீ, காபியும் வழங்கப்படுகிறது

சசிகலாவுக்கு ஏசி அறை வழங்கப்பட்டதாகவும், ஏ கிளாஸ் சிறை வசதி வழங்கப்பட்ட தாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளதே?

பெங்களூரு மத்திய சிறையை பொறுத்தவரை “ஏ'' கிளாஸ், “பி'' கிளாஸ் என எந்த வித்தியாச மும் இல்லை. சசிகலாவுக்கு எந்த சிறப்பு அறையும் வழங்கப் படவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்ற சாதாரண அறையே ஒதுக் கப்பட்டுள்ளது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். நேற்று இரவு கூட‌ தரையில்தான் படுத்திருந்தார். குளிர் அதிகமாக இருப்பதாக சொன்னதால், கூடுதலாக இரண்டு போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன.

சசிகலா தங்கியுள்ள அறையில் கொலை குற்றவாளி ஒருவர் தங்கி இருப்பதாகவும், பக்கத்து அறையில் சயனைடு மல்லிகா தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறதே?

அப்படியெல்லாம் யாரும் இல்லை. கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக மற்ற கைதியுடன் தங்க வைக்கப்படுவது வழக்கம். ச‌சிகலா கேட்டுக்கொண்டதால் அவருடன் இளவரசி மட்டும் தங்கியுள்ளார்.

பெங்களூரு மத்திய சிறையை பொறுத்தவரை 200-க்கும் குறைவான பெண் கைதிகளே இருக்கிறார்கள். பாதுகாப்புக்காக 3 மகளிர் சிறை கண்காணிப்பாளர்கள் இருக்கின்றனர். ஏதேனும் பிரச் சினை இருந்தால் அவர்களிடம் தெரிவிக்குமாறு சொல்லி இருக் கிறேன்.

மற்ற கைதிகள் மூலம் சசிகலாவுக்கு ஆபத்து வர வாய்ப்பு இருப்பதாக அதிமுக வினர் அச்சப்படுகிறார்களே? கூடுதலாக பாதுகாப்பு வழங்கப் படுமா?

இதெல்லாம் தேவையற்ற அச்சம். குற்ற வழக்கில் தண்டனை பெற்றதாலே சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை. இருப்பினும் எல் லோருக்கும் வழங்கப்படு வதைப் போல பாதுகாப்பு வழங் கப்படும்.

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற கோரிக்கை விடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

கைதி விரும்பினால் ஒரு சிறையில் இருந்து வேறு சிறைக்குள் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும். அதற்கு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். சசிகலா தேவைப்பட்டால் இந்தியாவுக்குள் எந்த சிறைக்கு வேண்டுமானாலும் தன்னை மாற்ற கோரலாம். அதற்கு நாங்கள் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.

உண்மையிலே சசிகலாவின் கைதி எண் என்ன? பல்வேறு எண்கள் சொல்லப்படுகின்றனவே?

இதெல்லாம் ஏன் வெளியே சொல்ல வேண்டும்? இதைத் தெரிந்து கொண்டு மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? சிறையில் கைதிக்கு எண்கள் வழங்கப்படுவது, அலுவல் ரீதியான பணிகளுக்கு மட்டும் இல்லை.

பாதுகாப்பு காரணங்களுக் காகவும்தான். கைதி எண்ணைத் தெரிந்து கொண்டு சில குற்றவாளிகள் சசிகலாவைத் தாக்கினால் என்ன செய்வீர்கள்? எனவே கைதி எண்ணைச் சொல்ல முடியாது. அதேபோல, சில கைதிகளுக்கு அவ்வப்போது கைதி எண்ணையும், அறையையும் மாற்றிக்கொண்டே இருப்போம். அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது.

சசிகலா சிறையில் மெழுகுவத்தி செய்வதாகவும், ஊதுபத்தி உருட்டுவதாகவும் கூறப்படுகிறதே?

இப்போதைக்கு அவர் எந்த வேலையும் செய்யவில்லை. தேவைப்பட்டால் அவர் விரும்பும் வேலையை செய்யலாம். அதற்காக பயிற்சி அளிக்கப்படும். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான சசிகலாவுக்கு ஊடகங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றன?

இவ்வாறு டிஜிபி சத்திய நாராயண ராவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x