Last Updated : 26 Jun, 2015 01:14 PM

 

Published : 26 Jun 2015 01:14 PM
Last Updated : 26 Jun 2015 01:14 PM

ஊழல் புகாரில் பங்கஜா முண்டேவுக்கு எதிராக ஆதாரம் அளித்தால் விசாரணை நடத்தப்படும்: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உறுதி

ஊழல் புகார் சுமத்தப்பட்ட அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு எதிரான ஆதாரத்தை எதிர்க்கட்சிகள் அளித்தால் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடத் தயார் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப் படும் நொறுக்குத் தீனி, புத்தகம் உட்பட பல்வேறு பொருட்களை ரூ. 206 கோடிக்கு கொள்முதல் செய்ததில், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே விதிகளை மீறியிருப்பதாக காங். முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவாண் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒப்பந்தப்புள்ளி கோராமல் கொள்முதல் செய்திருப்பதால் அதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் சவந்த், இதுதொடர்பாக ஊழல் தடுப்பு வாரியத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பட்னாவிஸ் கூறியதாவது:

அந்த கொள்முதலில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதாரத்தை அளித்தால், அதுதொடர்பாக விசாரணை நடத்த தயாராக இருக்கிறோம்.

ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவில்லை, விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என எதிர்க்கட்சி கள் குற்றம்சாட்டினால், 3 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளும் இ-டெண்டரில் தான் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை ஏப்ரல் மாதம் தான் அறிமுகப்படுத்தப் பட்டது என்பதையும் கொள்முதல் அதற்கு முன்பே நடைபெற்று விட்டது என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

‘ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை’ திட்டத்தின்கீழ், மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி மார்ச் 31-ந் தேதியுடன் காலாவதி ஆகிவிடும் என்பதற்காக, பிப்ரவரி மாதத்திலேயே கொள்முதலுக்கு பங்கஜா முண்டே ஒப்புதல் அளித்திருக்கிறார்.

மேலும், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, இதேபோன்ற விலை ஒப்பந்த முறையைத்தான் (பேரம் பேசுதல்) பின்பற்றினர். இதுதொடர்பாக அவர்கள் விளக்கமளித்தால், அவர்களின் இரட்டை நிலை வெளிப்படும்.

முந்தைய அரசு 2012-13-ம் ஆண்டில் ரூ. 164 கோடி, 2013-14-ல் ரூ.127 கோடி, 2014-ம் ஆண்டு ஜூன்-ஜூலையில் ரூ. 54 கோடிக்கு இதே முறையில்தான் கொள்முதல் செய்தது. பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம்தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதாவலே ஆதரவு

இந்தியக் குடியரசுக் கட்சி (அ) தலைவர் ராம்தாஸ் அதாவலே இதுதொடர்பாகக் கூறும்போது, “மக்களின் அமோக ஆதரவு பெற்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சி செய்வது பட்டவர்த்தனமாகியுள்ளது. பங்கஜாவின் நேர்மை குறித்து சந்தேகப்படுவதற்கில்லை. கடந்த காலங்களில் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான காங்கிரஸ் ஊழலைப்பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

ஊழல் நடைபெற்றதற்கு முகாந்திரம் இருக்குமேயானால் விசாரணையை எதிர்கொள்ள பங்கஜா முண்டே தயாராகவே இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x