Published : 28 Aug 2014 08:06 AM
Last Updated : 28 Aug 2014 08:06 AM

உள்துறை அமைச்சர் மகன் மீதான‌ குற்றங்கள் என்ன? - கட்சிகளின் எதிர்ப்பும் ஆதரவும்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்கின் மகன் மீது சுமத்தப்படும் குற்றங்கள் எல்லாம் பொய்யானவை என்று பிரத மர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மகென் கூறும்போது, "எதிர்க்கட்சியான காங்கிரஸோ அல்லது இந்த நாடோ ராஜ்நாத் சிங்கின் மகன் மீது எந்தக் குற்றங்களையும் சுமத்தவில்லை. அப்படியிருக்கும்போது, சுமத்தப்படாத குற்றங்களுக்காக பிரதமர் அலுவலகம் அவற்றை நிராகரிக்கின்றன என்றால், அந்தக் குற்றங்கள் என்னவென்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சி அந்தக் குற்றங்களைச் சுமத்தவில்லை என்றால் பிறகு யார் குற்றம் சுமத்துவது என்பது தெரிய வேண்டும்" என்றார்.

இதுகுறித்து சி.பி.ஐ. தலைவர் டி.ராஜா கூறும்போது, "பிரதமர் அலுவலகம் மிகக் குறைவாகவும் மிகத் தாமதமாகவும் தகவல் அளித்திருக்கிறது. எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்று பா.ஜ.க.வுக்கு ஆர்.எஸ்.எஸ். கட்டளை விதிக்கிறது. கட்சிக்குள் சச்சரவு இருந்தால் ஒழிய இப்படியான செய்திகள் வராது" என்றார்.

ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் இந்த விஷயத்தில் ராஜ்நாத் சிங்குக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். "ராஜ்நாத் சிங் கறைபடியாதவர்" என்று அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான டி.பி.திரிபாதி கூறும்போது, "எனக்கு ராஜ்நாத் சிங்கை பல ஆண்டுகளாகத் தெரியும். அவரோ அல்லது அவரின் குடும்பத்தினரோ குற்றம் செய்யக் கூடியவர்கள் அல்ல. இது விஷயத்தில் பிரதமர் அலுவலகம் சந்தேகத்தை நிவர்த்தி செய்துள்ளது வரவேற்கத்தக்கது" என்றார். சமாஜ்வாதி கட்சியின் தலைவரான கவுரவ் பாட்டியா கூறும்போது, "பிரதமர் அலுலவகம் அளித்துள்ள விளக்கம் பயனற்றது. எனினும், ராஜ்நாத் சிங்கிடம் எந்தக் குறையும் காண முடியாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x