Published : 17 Sep 2014 03:01 PM
Last Updated : 17 Sep 2014 03:01 PM

உலகின் டாப் 200 பட்டியலில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் இல்லை

கியு.எஸ். உலக பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்தியாவின் எந்த ஒரு பல்கலைக் கழகமும் இடம்பெறவில்லை.

ஐஐடி-பாம்பே, மற்றும் ஐஐடி-டெல்லி முறையே 222 மற்றும் 235வது இடங்களில் உள்ளது. கான்பூர், சென்னை, மற்றும் காரக்பூரில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 300 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

இவை தவிர தரவரிசையில் இடம்பெற்றுள்ள மற்ற பல்கலைக் கழகங்கள்: கொல்கத்தா பல்கலைக் கழகம், பெனாரஸ் இந்து பல்கலைக் கழகம், புனே பல்கலைக் கழகம், இந்திய விஞ்ஞானக் கல்விக் கழகம் மற்றும் ஜவஹர் லால் நேரு பல்கலைக் கழகம்.

முதல் 10 இடங்களில் முழுதும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் பல்கலைக் கழகங்களே இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் மசாச்சுஸெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தொடர்ந்து 2வது முறையாக முதலிடம் வகித்து வருகிறது.

ஆசியாவைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் அதிகபட்சமாக 22வது இடம் பிடித்துள்ளது.

உலகப் பல்கலைக் கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களில் ஒரு இந்தியப் பல்கலைக் கழகம் கூட இடம்பெறாதது பெறும் கவலையளிக்கும் அம்சம் என்று கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே இந்திய அளவில் பல்கலைக் கழகங்களைத் தரவரிசைப் படுத்தி கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு ஏற்கனவே தங்களது அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

இடஒதுக்கீடு உள்ளிட்ட கொள்கைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் தரவரிசை நிர்ணய முறையை இந்தியாவே நடத்தி கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவது தற்போது அவசியமாகிறது.

இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் ஊடகங்களின் மூலம் தங்களது கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்யாமல் உண்மையான தரநிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று கல்வித்துறை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x