Last Updated : 18 Apr, 2015 08:13 AM

 

Published : 18 Apr 2015 08:13 AM
Last Updated : 18 Apr 2015 08:13 AM

உ.பி. தேர்தலில் பகுஜன் சமாஜ் - ஆம் ஆத்மி கூட்டணி?- மாயாவதியின் தந்தையுடன் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பால் சலசலப்பு

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி பாபா சாஹிப் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியின் ஜண்டேவாலனில் அம்பேத்கர் உருவாக்கிய வரலாற்று சிறப்புமிக்க அம்பேத்கர் பவனில் நடைபெற்ற விழாவில் மாயாவதி யின் தந்தை பிரபு தயாள் கலந்து கொண்டார். இந்நிலையில் அவரை சந்திப்பதற்காக அர்விந்த் கேஜ்ரிவால் அங்கு திடீர் விஜயம் செய்தார். பிரபு தயாளை மிகவும் மதிப்புடன் வணங்கிய கேஜ்ரிவால், அவருக்கு அம்பேத்கர் ஜெயந்தியை ஒட்டி வாழ்த்து தெரிவித்தார். பிரபு தயாளிடம், தலித் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு மாயாவதி செய்த சேவையை கேஜ்ரிவால் பாராட்டியதாகவும் தெரிகிறது.

வாக்கு வங்கி அரசியலுக்காக பல்வேறு தலைவர்களுக்கு இடையே இதுபோல் திடீர் சந்திப்பு நிகழ்வது புதிதல்ல. ஆனால், இதுபோன்ற அரசியல் சூழலில் சிக்காமல் தனிப்பட்ட வகையில் அரசியல் செய்வதாகக் கூறிக் கொள்ளும் கேஜ்ரிவால் நடத்திய இந்த சந்திப்பு தேசிய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி வெற்றிக்கு தலித் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் முக்கியமானவர்கள். எனவே, இந்த சந்திப்பின் பின்னணியில் தேர்தல் கூட்டணிக்கான முயற்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்ட பின் உ.பி.யில் கேஜ்ரிவாலின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இம்மாநிலத்தில் அதிக அளவிலான முஸ்லிம் வாக்குகளுடன் மாயாவதியின் தலித் சமூகத்து வாக்குகளும் இணைந்தால், ஒன்றிணைந்த ஜனதா மற்றும் பாரதிய ஜனதாவை எளிதாக வென்று விடலாம். இதற்காக, மாயாவதி காட்டும் வரவேற்பை பொறுத்து எங்கள் கூட்டணி முயற்சி இருக்கும்” என்றனர்.

உ.பி. வரும் 2017-ல் சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கிறது.

கடந்த 2012-ல் நடந்த பேரவைத் தேர்தலில் மாயாவதியின் தோல்விக்கு முஸ்லிம் வாக்குகள் முலாயம் பக்கம் சென்றதே முக்கியக் காரணமாக இருந்தது.

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அம்பேத்ராஜன் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “2007-ல் நடந்த உ.பி. பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியை பிடித்தது. எனவே யாருடனும் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மாயாவதி தந்தையுடன் டெல்லி முதல்வர் நடத்தியது எதிர்பாராத தற்காலிக சந்திப்பு. இதில் கூட்டணி அரசியல் எதுவும் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x