Published : 27 Mar 2014 07:29 PM
Last Updated : 27 Mar 2014 07:29 PM

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது: இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்கவில்லை

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றப் புகார் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஆதரவில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேறியது.

தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரித் தும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.

இதுபற்றி இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி திலிப் சின்ஹா கூறியதாவது:

சர்வதேச புலனாய்வு விசாரணை ஏற்பாட்டால் அழைக் காமலே நுழையும் நிலைமையை இந்த தீர்மானம் மூலமாக ஐ.நா. கவுன்சில் திணித்துள்ளது. எதிர் பார்ப்புக்கு மாறான பலனே இதில் கிடைக்கும். மேலும் இது நடை முறைகளுக்கும் ஒத்துவராததாகும்.

2009, 2012, 2013ல் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைப் போல் அல்லாமல், இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை ஆராயவும் மதிப்பிடவும் கண்காணிக்கவும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு இந்த தீர்மானம் அழைப்பு விடுத்திருக்கிறது. இது இலங்கையின் இறையாண்மையை பலவீனப்படுத்தும்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது, தமிழர்கள் உள்பட அங்குள்ள எல்லா சமூகத்த வருக்கும் ஏற்புடைய அரசியல் தீர்வு காண்பதற்கான சிறந்த வாய்ப்பை கொடுத்துள்ளது என்பதே இந்தியாவின் கருத்தாகும்.

மனித உரிமைகளை பாதுகாத் திடவும் மேம்படுத்திடவும் இலங்கை மேற்கொள்ளும் சொந்த முயற்சி களுக்கு பங்களிப்பு தருவதாகவே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் முயற்சிகள் இருக்கவேண்டும். இந்த கவுன்சிலுடன் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது. கடந்த ஆண்டில் இலங்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திலிப் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.

2009ம் ஆண்டிலிருந்து இப்போதுதான் முதல் முறையாக ‘இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புடைமை, மனித உரிமைகள்’ தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. 2009, 2012, 2013ல் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

இதற்கிடையே, தீர்மானம் நிறை வேறியதை அடுத்து இலங்கையில் நடந்த போர்க்குற்றப் புகார்கள் தொடர்பாக விசாரணை தொடங் கியது. விசாரணை நடப்பதை தடுத்திட இலங்கை மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

2002ம் ஆண்டுக்கும் இறுதிப் போர் தொடுத்து விடுதலைப் புலிகளை வீழ்த்திய 2009ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை நவி பிள்ளையின் அலுவலகம் இனி விசாரிக்கும்.

‘இலங்கையில் நடந்த போரி ன்போது இருதரப்பும் நடத்தியதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள் பற்றி விரிவாக புலனாய்வு செய்ய வேண்டிய தருணம் இது’ என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தூதர் கண்டனம்

‘சர்வதேச சட்டத்தை அப்பட்ட மாக மீறி இருக்கிறது இந்த தீர்மானம்’ என ஜெனீவாவில் உள்ள இலங்கை தூதர் ரவிநாத ஆர்யசிங்கா, கவுன்சிலில் பேசும்போது கண்டனம் தெரிவித்தார்.

இலங்கையில் மேற்கொள்ளப் பட்டு வரும் நல்லிணக்க நடவடிக்கை களுக்கு உதவப் போவதில்லை என்றும் இலங்கையின் இறையாண் மையை இது சிதைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த தீர்மானத்தை கொண்டுவர பெரும் பங்காற்றின. ‘தேசிய அளவில் நம்பிக்கை தரும் நடவடிக்கை இல்லாதபோது சர்வதேச விசாரணை நடவடிக்கை அவசியம்’ என ஐ.நா. உரிமைகள் தலைவர் நவி பிள்ளை கோரியிருந்ததை இந்த தீர்மானம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

தனி நாடு கோரி விடுதலைப் புலிகள் 37 ஆண்டுகளாக நடத்திய சண்டையை முடிவுக்குக் கொண்டு வர இலங்கை ராணுவம் நடத்திய இறுதிப்போரில் பல்லாயிரக் கணக்கில் தமிழ் இனத்தவர் கொல்லப்பட்டனர் என ஐ.நா. பார்வையாளர்கள் தெரிவிக்கின் றனர்.

1972 முதல் 2009-ம் ஆண்டுவரை நடந்த போரில் 1 லட்சம் பேர் பலியானதாக ஐ.நா. மதிப்பிடுகிறது.

ஐ.நா. விசாரணையை நிராகரிக்கிறோம்: ராஜபக்சே

போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டு ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை நிராகரிக்கிறது என அதிபர் மகிந்த ராஜபக்சே வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த தீர்மானம் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும். எனினும் நான் மனம் உடைந்து போகவில்லை. நல்லிணக்க முயற்சிகளை தொடருவேன். தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாதது ஆறுதல் தருகிறது; ஊக்கம் தருகிறது. நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த அவகாசம் தேவைப்படுகிறது என்றார் ராஜபக்சே.

இதனிடையே, வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது ராஜீய உறவு ரீதியில் இலங்கைக்கு கிடைத்த வெற்றி என மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். -ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x