Last Updated : 24 Jul, 2016 03:28 PM

 

Published : 24 Jul 2016 03:28 PM
Last Updated : 24 Jul 2016 03:28 PM

இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பாத காஷ்மீர்: 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

ஜம்மு காஷ்மீரின் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிப்பதால் 16-வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதை அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 3400 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பதற்றத்தை தணிக்க ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பண்டிபோரா, பாராமுல்லா, புத்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைதி திரும்பியதை அடுத்து அம்மாவட்டங்களில் நேற்று (சனிக்கிழமை) ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும் 4 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அதே சமயம் தெற்கு காஷ்மீரில் உள்ள மாவட்டங்களில் பதற்றம் தணியாத காரணத்தினால் அங்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது. இது குறித்து காஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தெற்கு காஷ்மீரின் ஆன்ந்த்நாக், குல்ஹாம், குப்வாரா, புல்வாமா மற்றும் சோபியான் ஆகிய 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீநகரின் 8 போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த சூழலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து ஆனந்த்நாக் மாவட்டத்தில் இன்று கண்டன பேரணி நடத்துவதற்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடக்ககூடும் என்பதால், இந்த பேரணியை தடுத்து நிறுத்த பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸாரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x