Published : 25 Oct 2016 09:04 AM
Last Updated : 25 Oct 2016 09:04 AM

இந்திய - சீன எல்லையில் முதல்முறையாக ஆயுதம் தாங்கிய 100 பெண் வீரர்கள் நியமனம்

கடினமான சீன எல்லையில் முதல்முறையாக ஆயுதம் தாங்கிய 100 பெண் வீரர்களை இந்திய திபெத் எல்லைக் காவல் படை நியமித்துள்ளது.

மத்திய அரசின் ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான இந்திய திபெத் எல்லைக் காவல் படை 80 ஆயிரம் வீரர்களைக் கொண்டுள்ளது. 1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு இது உருவாக்கப்பட்டது. இது தொடங்கப்பட்டதன் 55-ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதன் தலைமை இயக்குநர் கிருஷ்ண சவுத்ரி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திய சீன எல்லையில் 15 எல்லைச் சாவடிகளில் 100 பெண் வீரர்கள் நியமிக்கும் நடைமுறைகள் சமீபத்தில் முடிவடைந்தன. போர்த் தளவாட மற்றும் ஆயுதப் பயிற்சி பெற்ற இப்பெண் வீரர்களுக்குத் தேவையான வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “இந்தப் பெண் வீரர்களில் பெரும்பாலானோர் ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக்கில் உள்ள எல்லைச் சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றவர் கள் இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச் சலப் பிரதேச எல்லையில் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் சில எல்லைச் சாவடிகளில் பெண் வீரர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இந்திய திபெத் எல்லைக் காவல் பணிக்காக 500 பெண் வீரர்கள் கொண்ட படை இந்த ஆண்டு தொடக்கத்தில் செயல் பாட்டுக்கு வந்தது. போர்த் தளவாடப் பயிற்சியும் கடினமாக மலைப்பகுதியில் தாக்குப் பிடிக்கும் பயிற்சியும் 44 வாரங்களுக்கு அளிக்கப்பட்ட பிறகு இப்படை செயல்பாட்டுக்கு வந்தது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள பெண் வீரர்கள் கடல்மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் அடி முதல் 14 ஆயிரம் அடி உயரம் கொண்ட இடங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தின் இந்தியப் பகுதியின் கடைசி கிராமத்தில் உள்ள மானா கணவாய் எல்லைச் சாவடியும் இதில் அடங்கும். இந்தச் சாவடிகளில் பெண் வீரர்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடினமான நிலப்பகுதி மற்றும் காலநிலை கொண்ட இந்திய சீன எல்லையில் பெண் வீரர்களை இந்தியா நியமிப்பது இதுவே முதல்முறை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x