Last Updated : 25 Apr, 2015 09:08 AM

 

Published : 25 Apr 2015 09:08 AM
Last Updated : 25 Apr 2015 09:08 AM

இணையதள சமவாய்ப்புக்கு ஆதரவாக சென்னை, பெங்களூருவில் போராட்டம்: ஏராளமான மென்பொருள் பொறியாளர்கள் பங்கேற்பு

இணையதள சமவாய்ப்புக்கு ஆதரவாக டெல்லியை தொடர்ந்து பெங்களூருவில் நேற்று மென் பொருள் பொறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இணையதள சமவாய்ப்புக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.

'நெட் நியூட்ராலிட்டி' என்று அழைக்கப்படும் `இணையதள சமவாய்ப்பு' விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையதள சமவாய்ப்பு விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் புதிய கட்டுப்பாடுகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இணையதள சமவாய்ப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மென்பொருள் பொறியாளர் அமைப்புகள், சமூக வலைத்தளங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். டெல்லியை தொடர்ந்து பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இடங்களில் மென்பொருள் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப துறையின் தலைநகராக விளங்கும் பெங்களூருவில் `கர்நாடக இலவச மென்பொருள் இயக்கம்' சார்பில் நேற்று 4 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. எலக்ட்ரானிக் சிட்டி, மன்யதா டெக் பார்க், ஒயிட் ஃபீல்ட், சர்ஜாபூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், இணையதள சமவாய்ப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட உடைகளை அணிந்திருந்தனர். மேலும் தங்களது கைகளில் `இணையதள சமவாய்ப்பு உரிமை எங்களது பிறப்புரிமை, எனது இணையதளம் எனது உரிமை' என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x