Published : 05 Mar 2015 08:12 AM
Last Updated : 05 Mar 2015 08:12 AM

ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திய முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்

கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் நாகப்பா. முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது பெங்களூரு சதாசிவநகரில் தனியார் நிறுவன பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இவர் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது காவேரி திரையரங்கம் எதிரே ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

அந்த ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி கிடைக்காமல் திணறியது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பசவராஜ், நாகப்பாவை சாலையில் குறுக்கே இருக்கும் தடுப்பை தள்ளி வைக்குமாறு கேட்டுள்ளார். எனவே நாகப்பா ஆம்புலன்ஸ் செல்வதற்கு வசதியாக சாலையின் நடுவே இருந்த தடுப்பை தள்ளி வைத்து, வழி ஏற்படுத்தி தந்துள்ளார்.

இதனை பார்த்த சதாசிவநகர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர். கங்கண்ணா, “எதற்காக தடுப்பை தள்ளினாய்? ஆம்புலன்ஸுக்கு வழி விடுவது தான் உனது வேலையா?'' என முன்னாள் ராணுவ வீரர் நாகப்பாவை அறைந்து, மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த சம்பவத்தைப் படம்பிடித்த கன்னட தொலைக்காட்சி அதனை ஒளிபரப்பியது.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்களில் பலர், “ஆம்புலன்ஸூக்கு வழிவிட்டு உயிரைக் காப்பாற்றிய முன்னாள் ராணுவ வீரரை, உதவி ஆய்வாளர், அனைவரின் முன்பும் தாக்கலாமா'' என சமூக வலைத்தளங்கள் மூலம் பெங்களூரு போக்குவரத்து காவல் ஆணையரிடம் கேள்வி எழுப்பினர். அடுத்த ஒரு மணி நேரத்தில் நாகப்பாவை தாக்கிய கங்கண்ணாவை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துணை ஆணையர் எம்.என்.பி.ஆர் பிரசாத் உத்தரவிட்டார்.

ராணுவவீரர் நாகப்பாவை தாக்கும் உதவி ஆய்வாளர் கங்கண்ணா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x