Last Updated : 31 Jan, 2015 01:08 PM

 

Published : 31 Jan 2015 01:08 PM
Last Updated : 31 Jan 2015 01:08 PM

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு: பெண்கள் பாதுகாப்புக்கு 15 லட்சம் கேமராக்கள் - கேஜ்ரிவால் உறுதி

டெல்லியில் பெண்கள் பாதுகாப்புக்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் 15 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புனித நூல் போன்றது:

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய கேஜ்ரிவால், "எங்களது தேர்தல் அறிக்கை கீதை, பைப்பிள், குரான் போல புனிதமானது. நாங்கள் குறிப்பிட்டுள்ள 70 அம்சங்களும் டெல்லியில் அனைத்து வகையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதில் பெண்களின் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, கிராமங்களை இணைப்பது போன்ற பல தரப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டு" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின்போது அவரது பாதுகாப்புக்காக 15,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபருக்காக 15,000 கேமராக்கள் பொருத்த முடியும் என்றால் நம் சகோதரிகள், நம் தாய்மார்கள் பாதுகாப்புக்காக ஏன் சிசிடிவி கேமராக்களை பொருத்தக்கூடாது" என கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 7-ல் நடைபெறுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக சார்பில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி, காங்கிரஸ் சார்பில் அஜய் மாக்கன் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கைக்குப் பதிலாக தொலைநோக்குத் திட்டத்தை அறிவிப்போம் என கூறியுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

*டெல்லியில் பெண்கள் பாதுகாப்புக்கு 15 லட்சம் கேமராக்கள் பொருத்தப்படும்

* 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படும்.

* டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

*கல்வி, சுற்றுலா, வர்த்தகம், பிற சேவை துறைகள் மேம்படுத்தப்படும்.

*வேலைவாய்ப்பு பெருக்கப்படும்.

*டெல்லியில் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது வரம்பு 60 ஆக இருக்கும்.

*அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி, மருத்துவ காப்பீட்டு வசதி செய்து தரப்படும்.

*யமுனை நதியில் குப்பைகள், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கப்படுகிறது

*அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அமைக்கப்படும்

*நில கையகப்படுத்துதலுக்கு ஒப்புக்கொள்ளுமாறு யாரும் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள்

*விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகளுக்கான மானியம் வழங்கப்படும்

*தலைநகரில் வாட் வரி குறைக்கப்படும். இதன்மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்

*கல்வி முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் கல்வி முறை அமையும்.

*டெல்லியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மாதத்துக்கு 20,000 லிட்டர் தண்ணீர் கிடைக்க உறுதி செய்யப்படும்.

*டெல்லி முழுவதும் 2 லட்சம் கழிவறைகள் கட்டப்படும். இவற்றில் சேரிப் பகுதிகளில் 1.5 லட்சம் கழிவறைகளும், ஜெ.ஜெ.தொகுப்பு வீடுகள் பகுதியில் 50,000 கழிவறைகளும் கட்டப்படும்.

*மேல்நிலை, உயர்நிலைக் கல்விக்கு சிறப்பு கூர்நோக்கு கவனம் செலுத்தும் வகையில் 500 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்

*900 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்

*டெல்லி மருத்துவமனைகளில் கூடுதலாக 30,000 படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்

*பெண்கள் பாதுகாப்புப் படை (மஹிளா சுரக்‌ஷா தல்) உருவாக்கப்படும்.

*டெல்லியில் பொது இடங்களில் வை-பை சேவை இலவசமாக வழங்கப்படும்.

*போதைப்பொருள் கடத்தல் தடுக்கப்படும்.

*வனம், சுற்றுச்சூழல் பகுதிகள் பாதுகாக்கப்படும்

*முதியோர் ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்

*பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அதிவிரையில் நியாயம் கிடைக்கும் வகையில், 47 பாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

*1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

தேர்தல் அறிக்கை வெளியிட பாஜக தயக்கம்:

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அறிக்கை வெளியிடப் போவதில்லை அதற்கு பதிலாக தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்படும் என பாஜக கூறியுள்ளதை கேஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேர்தல் அறிக்கை வெளியிட பாஜக தயக்கம் காட்டுகிறது. ஏற்கெனவே மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையே பாஜக செயல்படுத்தவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவர். எனவேதான் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்க பாஜக தயக்கம் காட்டுகிறது என கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x