Published : 27 Nov 2015 11:47 AM
Last Updated : 27 Nov 2015 11:47 AM

ஆமீர் கானை அறைந்தால் ரூ.1 லட்சம்- கட்சியின் பஞ்சாப் கிளை அறிவிப்புக்கு சிவசேனா கண்டனம்

சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஆமீர் கானை கன்னத்தில் அறையும் நபருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என பஞ்சாப் மாநில சிவசேனா அறிவித்ததை கட்சி மேலிடம் ஆதரிக்கவில்லை என சிவசேனா தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார் ஆமீர் கான். அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியை சூழ்ந்து கொண்ட சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆமீர் கானை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தனர், அவரது புகைப்படங்களை எரித்தனர்.

அப்போது பேசிய பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் ராஜீவ் டாண்டன், "ஆமீர் கானை கன்னத்தில் அறையும் ஒவ்வொரு சிவசேனா தொண்டருக்கும் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும்" என்றார்.

இது தொடர்பாக சிவசேனா கட்சி மேலிடம் வெளியிட்ட அறிக்கையில், "ஆமீர் கானை கன்னத்தில் அறைந்தால் ரூபாய் 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் மாநில சிவசேனா கட்சியினர் தெரிவித்துள்ளதை கட்சி மேலிடம் ஆதரிக்கவில்லை.

அந்த அறிவிப்புக்கும் கட்சித் தலைவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற கருத்துகளை சிவசேனா ஒருபோதும் ஆதரிக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் டெல்லியில் நடந்த பத்திரிகை ஒன்றின் விருது நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி முன்னிலையில் பேசிய பாலிவுட் நடிகர் ஆமீர் கான் "வீட்டில் எனது மனைவி கிரணிடம் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென இந்தியாவை விட்டு சென்றுவிடலாமா எனக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கண்டு அவர் மிகவும் அஞ்சிவிட்டார். தினசரி நாளிதழ்களை பிரித்துப் பார்ப்பதற்கு கூட அவர் பயப்படுகிறார். அந்த அளவுக்கு நாட்டில் சகிப்பின்மை வளர்ந்துவிட்டது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x