Last Updated : 26 Aug, 2016 10:44 AM

 

Published : 26 Aug 2016 10:44 AM
Last Updated : 26 Aug 2016 10:44 AM

அரசு மருத்துவமனையில் மறுக்கப்பட்ட வாகன வசதி: மனைவியின் சடலத்தை சுமந்தபடி மகளுடன் 10 கி.மீ. தூரம் நடந்த கணவன்

விசாரணை நடத்த ஒடிசா மாநில அரசு உத்தரவு

வாகன வசதி மறுக்கப்பட்டதால் மனைவியின் சடலத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு, மகளுடன் 10 கி.மீ. நடந்து சென் றுள்ளார் பரிதாப கணவர். இது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் கலாஹண்டி மாவட்டம் மெல்காரா கிராமத்தைச் சேர்ந்தவர் தனா மஜி (42). பழங்குடியினத்தைச் சேர்ந்த இவரது மனைவி அமாங்தீ. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமாங்தீயை, 60 கி.மீ. தூரத்தில் பவானி பட்னாவில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அமாங்தீ இறந்துவிட்டார்.

ஒடிசாவில் ஏழைகளின் வசதிக்காக, இறந்தவர்களின் உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக இலவச வாகன திட்டத்தை முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த பிப்ரவரி மாதம்தான் தொடங்கி வைத்தார். இந்நிலையில், மனைவியின் உடலைத் தனியார் வாகனத்தில் கொண்டு செல்ல பணம் இல்லாத தால், மருத்துவமனை நிர்வாகத் திடம் வாகனம் கேட்டுள்ளார்.

மருத்துவமனை அதிகாரி களிடம் தனா மஜி எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் மனமுடைந்த அவர், மனைவியின் உடலை துணியில் சுற்றினார். கடந்த புதன்கிழமை காலையில் உடலை தோளில் தூக்கிக் கொண்டு, தனது 12 வயது மகளுடன் சொந்த கிராமத்துக்குக் கிளம்பினார். அவருடன் மகளும் அழுதபடி நடந்தே சென்றார்.

உடல் விறைத்துப் போயிருந்த தால் அவரால் தூக்கிச் செல்லவும் சிரமம் ஏற்பட்டது. எப்படியோ 10 கி.மீ. தூரம் தூக்கிச் சென்று விட்டார். இதைப் பார்த்த உள்ளூர் செய்தியாளர்கள், உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அங்கிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனா மஜி கூறும்போது, “நான் ஏழை. வாகனத்துக்கு என் னால் பணம் கொடுக்க முடியாது. அரசு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று மருத்துவமனை அதிகாரிகளிடம் எவ்வளவோ கெஞ்சினேன். ஆனால், அவர்கள் உதவி செய்ய முடியாது என்று மறுத்துவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

கலாஹண்டி மாவட்ட ஆட்சியர் பிருந்தா கூறும்போது, “மகாபரயாணா திட்டத்தின் கீழ் சடலங்களை எடுத்து செல்ல 37 அரசு மருத்துவமனைகளில் இலவச வாகனங்கள் இருக்க வேண்டும்” என்று கூறினார். ஆனால், தனா மஜிக்கு வாகனம் மறுக்கப்பட்டது குறித்து அவர் எந்த பதிலும் கூறவில்லை.

அமைச்சர் விளக்கம்

இதுகுறித்து மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் புஷ்பேந்திர சிங்தியோ கூறும் போது, “சடலத்தை எடுத்துச் செல்ல தனா மஜி வாகனம் கேட்டது குறித்த தகவல் மருத்துவமனை அதிகாரிகளுக் குத் தெரிந்தவுடன் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் துரதிருஷ்ட வசமாக அவர் சடலத்தைத் தூக்கிக்கொண்டு 10 கி.மீ. தூரம் வரை சென்றுள்ளார். எனினும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பவானி பட்னா துணை ஆட்சியருக்கு கலா ஹண்டி மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். மேலும் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி யிடமும் விளக்கம் கேட்கப்பட் டுள்ளது. என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x