Published : 27 Jan 2015 03:47 PM
Last Updated : 27 Jan 2015 03:47 PM

அமெரிக்க நலன்களுக்கு சரணடைந்துவிட்டார் மோடி: இடதுசாரிகள் தாக்கு

அணுசக்தி ஒப்பந்தத்தைப் பொருத்தவரை அமெரிக்க நலன்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டதாக இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

மேலும், அமெரிக்க விருப்பங்களுக்கு வளைந்து கொடுத்து மோடி ஏற்படுத்தியுள்ள உறவு, தரம் தாழ்ந்தது எனவும் இடதுசாரி கட்சிகள் சாடியுள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வந்த இழுபறி நீங்கிவிட்டதாக அரசு கூறுகிறது.

ஆனால், அணு உலை விபத்து இழப்பீட்டுச் சட்டம் குறித்து அமெரிக்க நிலைப்பாடு என்பதை அரசு தெளிவாக தெரிவிக்கவில்லை. இதுவே அமெரிக்காவின் விருப்பங்களுக்கு மோடி அடிபணிந்துவிட்டார் என்பதற்கு சிறந்த சான்றாகும்.

அணு உலை விபத்து தொடர்பான சர்ச்சைக்குரிய ஷரத்துகளில் என்ன மாதிரியான சமரசங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை அரசு ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அணு உலையை வழங்கிய நாடு தான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் அமெரிக்காவோ 'அணு உலையை வழங்கிய நாடு பொறுப்பேற்க முடியாது. அணு உலையை இயக்கும் நாடு தான் இழப்பை வழங்க வேண்டும்; இது தான் உலகம் முழுவதும் அணு உலைகளில் பின்பற்றப்படும் முறை; அதைத் தான் இந்தியாவும் பின்பற்ற வேண்டும்’ என கூறிவந்தது.

இத்தகையச் சூழலில் அண்மையில் மோடியும் - ஒபாமாவும் நடத்திய பேச்சுவார்த்தையில் அணு உலை பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

2010-ல் கொண்டுவரப்பட்ட சட்டம், அணு உலை விபத்து இழப்பீடு பெற இந்திய குடிமகனுக்கான உரிமையை நிலைநாட்டுவதாக இருந்தது. ஆனால் மோடியின் ஒப்பந்தமோ அமெரிக்காவின் நீண்ட நாள் கெடுபிடிக்கு தலை வணங்கும் வகையில் சர்ச்சைக்குரிய ஷரத்துகளை வலுவிழக்கச் செய்வதாக உள்ளன.

அணு உலை விபத்து இழப்பீட்டு விவகாரத்தை உள்நாட்டு இன்சூரன்ஸ் மூலம் சமாளித்துக் கொள்ள வழிவகுத்துள்ளது மோடியின் நடவடிக்கைகள். இதனால் மொத்த சுமையும் இந்தியாவுக்கே" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கருத்தை முன்வைத்து இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜாவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x