Published : 02 Jan 2017 08:34 AM
Last Updated : 02 Jan 2017 08:34 AM

முலாயம், சிவபால் யாதவ் பதவி பறிப்பு: சமாஜ்வாதி தலைவராக அகிலேஷ் தேர்வு- தேர்தல் ஆணையத்துக்கு முலாயம் அவசர கடிதம்

சமாஜ்வாதியின் தேசிய மாநாடு லக்னோவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இதில் அந்த கட்சியின் தேசிய தலைவராக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் இனிமேல் ஆலோசகராகச் செயல்படுவார் என்றும் மாநிலத் தலைவர் சிவபால் யாதவ் பதவி நீக்கம் செய்யப்படுகிறார் என்றும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இதை கடுமையாகக் கண்டித் துள்ள முலாயம் சிங், சட்டவிரோத மாக கட்சி மாநாடு நடத்தப்பட் டுள்ளது, அகிலேஷை தலைவராக அங்கீகரிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல்

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ் வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. முலாயமின் மகன் அகிலேஷ் முதல்வராக பதவி வகிக்கிறார். அவருக்கும் முலாயமின் சகோ தரரும் கட்சியின் மாநிலத் தலை வருமான சிவபால் யாதவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது.

அந்த மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ள நிலையில் 393 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை முலாயம் அண்மையில் வெளியிட்டார். இதில் சிவபால் யாதவின் ஆதரவாளர்கள் அதிகம் இடம்பெற்றிருந்தனர். முதல்வர் அகிலேஷின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. எனவே 235 பேர் கொண்ட போட்டி வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் தயார் செய்தார். அந்த பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதன்காரணமாக அகிலேஷும், அவரது ஆதரவாளர் ராம் கோபால் யாதவும் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கப்படுவதாக கடந்த 30-ம் தேதி முலாயம் சிங் அறிவித் தார். எனினும் அகிலேஷுக்கு அதிகரித்து வரும் ஆதரவு, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் சமரசத் தால் நேற்றுமுன்தினம் இருவரும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.

தேசிய தலைவரானார் அகிலேஷ்

சமாஜ்வாதி பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் ஏற்கெனவே அறிவித்தபடி கட்சியின் தேசிய மாநாடு லக்னோவில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் தேசிய தலைவராக முதல்வர் அகிலேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் ஆலோசகராக, வழிகாட்டியாக இருந்து கட்சிக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து சிவபால் யாதவ் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக நரேஷ் உத்தம் மாநிலத் தலை வராக நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்புகளை ராம் கோபால் யாதவ் வெளியிட்டார்.

மேலும் முலாயமுக்கு மிகவும் நெருக்கமான அமர் சிங்கை கட்சி யில் இருந்து நீக்கவும் மாநாட்டில் பரிந்துரை செய்யப்பட்டது.

அகிலேஷ் ஆவேசம்

மாநாட்டில் முதல்வர் அகிலேஷ் பேசியதாவது: நேதாஜியை (முலாயம் சிங்) நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் அவருக்கு எதிராகச் சிலர் சதிச் செயலில் ஈடு பட்டுள்ளனர். அவர்கள் மீது நட வடிக்கை எடுப்பது எனது கடமை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் எனது தந்தை (முலாயம்) மிகுந்த மகிழ்ச்சி அடை வார். என்னையும் என் தந்தையை யும் யாராலும் பிரிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

முலாயம் ஏற்க மறுப்பு

இந்த விவகாரம் தொடர்பாக சிவபால் யாதவ் லக்னோவில் நேற்று பிற்பகல் முலாயம் சிங்கை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு முலாயம் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராம் கோபால் யாதவ் கூட்டிய கட்சி மாநாடு சட்டவிரோதமானது. அவர் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். இதே போல புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்ட நரேஷ் உத்தம், தேசிய துணைத் தலைவர் கிரண் மோய் நந்தா ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

ராம் கோபால் யாதவுக்கு ஆதர வாக செயல்படும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் உண்மையான தேசிய மாநாடு வரும் 5-ம் தேதி நடை பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

முலாயம் சிங்கின் அறிக்கையில் அகிலேஷ் குறித்து எதுவும் குறிப் பிடவில்லை. அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனினும் சமாஜ்வாதியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவை அங்கீகரிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு முலாயம் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில், அகிலேஷின் ஆதரவாளர்கள் லக்னோவில் உள்ள சமாஜ்வாதி தலைமையகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x