Last Updated : 09 Nov, 2016 12:25 PM

 

Published : 09 Nov 2016 12:25 PM
Last Updated : 09 Nov 2016 12:25 PM

புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளின் நிலவரம்: அரசு விளக்கம்

ஏடிஎம் இயந்திரங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 11) முதல் புதிய அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ரூ.500, ரூ.2000 நோட்டுகள் கிடைக்கும் என நிதித் துறை செயலர் அசோக் லவாசா தெரிவித்தார்.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நிதித் துறைச் செயலர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாளை மறுநாள் (நவம்பர் 11) முதல் ஏடிஎம் இயந்திரங்களில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் கிடைக்கும்.

புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகத்தை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணிக்கும். ரூபாய் நோட்டுகள் மீதான இந்த தடையால் இதுவரை புழக்கத்துக்கு வராமல் இருந்த பெருந்தொகை வெளியில் வரும்.

ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதில் நிலவும் சிக்கல்கள் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளின் வழங்கல் சீரானவுடன் எளிதாகும்" என்றார்.

அவர் மேலும் கூறும்போது, "இது மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் மக்கள் இன்னல்களை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏடிஎம் மையங்களில் எளிதாக பணத்தை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் ஏடிஎம் மையங்களில் பண வழங்கல் சீராகும்.

சில இடங்களில் நாளையே ஏடிஎம் மையம் இயங்கும். அரசின் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்குவார்கள் என நம்புகிறேன். நாளடைவில் நிலைமை சீரடையும். பங்குச்சந்தை சரிவுக்கு முழுக்க முழுக்க இந்த நடவடிக்கையை மட்டும் காரணமாகக் கூற முடியாது. பொறுத்திருந்தே நிலைமையைக் கண்காணிக்க வேண்டும்" என்றார்.

தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் கூறும்போது, "இது ஒரு முக்கியமான நடவடிக்கை. ஊழல், கள்ளநோட்டு, கருப்புப் பணத்தை ஒழிக்க அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது" என்றார்.

அன்றே எச்சரித்த மோடி:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் அண்மையில் துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தி 7 தீவிரவாத முகாம்களை அழித்தது.

இதேபோல நாட்டில் கருப்பு பணத்தைக் கட்டுப்படுத்த நிதித் துறையிலும் விரைவில் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x