Published : 22 Aug 2016 03:27 PM
Last Updated : 22 Aug 2016 03:27 PM

வீட்டை விட்டு வெளியேறும் சிறுவர்களுக்கு நரகம் ஆகும் ரயில் நிலையங்கள்

வீடுகளை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் தஞ்சமடையும் சிறுவர்கள், உடல் ரீதியான கொடுமைகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாகிறார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

கொல்கத்தாவின் பிரபல சமூக ஆய்வு அமைப்பான 'மஹானிர்பன் கொல்கத்தா ஆய்வுக்குழு' நடத்திய ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''எங்களின் ஆய்வின் ஒரு பகுதியாக சிறுவர்களுக்கான ஓவிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பெரும்பாலான சிறுவர்கள் கம்பு, கழிகளை வரைந்தனர். இதன்மூலம் அவர்கள் உடல்ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளது வெளிப்பட்டுள்ளது. அவர்கள் உடல்ரீதியாக மட்டுமல்லாமல் பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாகின்றனர்.

அந்த சிறுவர்களின் விவரங்கள் சமூக அமைப்புகளாலும், ரயில்வே அதிகாரிகளாலும் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றின் மூலம் சில விவரங்கள் தெரியவருகின்றன. அவர்களில் 78 சதவீதம் பேர் சீல்டா ரயில் நிலையத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லிம் வகுப்பினர். இவர்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேறியவர்களாகவோ அல்லது தொலைந்து போனவர்களாகவோ இருக்கின்றனர்.

கொல்கத்தாவின் முக்கிய ரயில் நிலையங்களில் தினந்தோறும் மூன்று சிறுவர்கள் தஞ்சமடைகின்றனர். பொருளாதார ரீதியில் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்ற கட்டாயத்தாலேயே சிறுவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். இவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற 20 சதவீதத்தினர், ஜார்கண்ட், பீகார், ஒடிசா, அஸ்ஸாம், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். சராசரியாக 12 வயது சிறுவர்கள் மிகப்பெரிய உடல் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகிறார்கள்.

பின்னர் போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தில் பெரும் தொகையை போதைப் பொருட்களுக்கும், பாலியலுக்கும் செலவழிக்கின்றனர்.

புலம்பெயர்ந்த பெண்களைப் பொறுத்தவரை குப்பைகள் பொறுக்கவும், வீட்டு வேலைகள் செய்யவும் செல்கின்றனர். வீட்டு வேலைகளில் உதவும் பெண்களுக்கு முறையான சம்பளம் கிடைப்பதில்லை என்பதோடு அவர்கள், வீட்டு உரிமையாளர்களின் கழிப்பறைகளைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவதில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, 'கொல்கத்தா பெண்கள் மற்றும் புலம்பெயர்ந்த சிறுவர்கள் - ஓர் ஆய்வு' என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x