Published : 01 Jun 2016 09:20 AM
Last Updated : 01 Jun 2016 09:20 AM

ரத்தம் ஏற்றியதால் 2,234 பேருக்கு எச்ஐவி: தமிழகத்தில் 89 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 17 மாதங் களில் மட்டும் பரிசோதிக்கப்படாத ரத்தம் ஏற்றியதால் 2,234 பேருக்கு எச்ஐவி வைரஸ் பரவியுள்ளது. அதன்படி தமிழகத்தில் 89 பேருக்கு எச்ஐவி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சேத்தன் கோத்தாரி. ரத்தம் ஏற்றியதால் எச்ஐவி வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் புள்ளி விவரங்களை அளிக்குமாறு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவர் விண்ணப்பித்தார். அந்த அமைப்பு அளித்த புள்ளி விவரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 17 மாதங்களில் மட்டும் ரத்தம் ஏற்றியதால் 2,234 பேருக்கு எச்ஐவி வைரஸ் தொற்று ஏற்பட் டுள்ளது. இதில் மிக அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 361 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் 292, மகாராஷ்டிரா 276, டெல்லி 264, மேற்குவங்கம் 135, கர்நாடகா 127, பிஹார் 91, தமிழகம் 89, பஞ்சாப் 88, சத்தீஸ்கர் 69, ஒடிசா 55, ராஜஸ்தான் 55, ஆந்திரா 43, தெலங்கானா 42, கேரளா 29, சண்டீகர் 19, ஜார்க்கண்ட் 17, மணிப்பூர் 17, உத்தராகண்ட் 16, மத்தியப் பிரதேசம் 14. ஜம்மு-காஷ்மீர் 14, அசாம் 8, மிசோரம் 4, நாகாலந்து 4, டையூ டாமன் 3, கோவா 2, புதுச்சேரி 1 என ஒட்டுமொத்தமாக 2,234 பேருக்கு ரத்தம் ஏற்றியதால் எச்ஐவி வைரஸ் பரவியுள்ளது.

கடந்த வாரம் அசாம் மாநிலம் காம்ரப் பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை தீக் காயம் காரணமாக குவாஹாட்டி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு எச்ஐவி வைரஸ் தொற்றுடைய ரத்தத்தை ஏற்றி யுள்ளனர். இதனால் குழந்தை இப் போது எச்ஐவியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சேத்தன் கோத்தாரி கூறியபோது, அரசு மருத்துவமனைகள், ரத்த வங்கிகளில் போதிய ஆய்வக வசதிகள் இல்லாதது, ஊழியர்களின் அலட்சியம் ஆகியவற்றால் இதுபோன்ற மாபெரும் தவறுகள் நேரிடுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் 5 வகை சோதனைகள்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்ட இயக்குனர் எஸ்.நடராஜன் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு சார்பில் 87 மற்றும் தனியார் சார்பில் 200 ரத்த வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகளில் ஒரே மாதிரியான பரிசோதனை முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதாவது, கொடையாளரின் ரத்தத்தில், எச்ஐவி, மஞ்சள் காமாலைக்கான பி1 மற்றும் சி1, மலேரியா, மற்றும் பால்வினை நோய்களை கண்டறியும் 5 வகையான பரிசோதனைகள் செய்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைகளில் ஒரு நோய் அறிகுறி தென்பட்டால்கூட அந்த ரத்தம் நிராகரிக்கப்பட்டுவிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x