Published : 20 Feb 2014 09:42 PM
Last Updated : 20 Feb 2014 09:42 PM

மூவர் தூக்கு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல்

கருணை மனு மீது முடிவு எடுக்க ஏற்பட்ட தாமதம் காரணமாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்ற வாளிகளின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன் றத்தில் வியாழக்கிழமை மனு செய்தது.

இந்த வழக்கில் மரண தண் டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தண்டனை குறைப்பு பெற்ற நிலையில், அவர்களை விடுதலை செய்வது என தமிழக அரசு எடுத்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது. அதன் பிறகு சில மணி நேரத்தில் அவசர அவசரமாக தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் வருமாறு: தலைமை நீதிபதி ப.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.கே.சிங் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதி அமர்வு இந்த வழக்கின் தன்மையை பரிசீலிக்கவில்லை. மேலும் இந்த வழக்கில் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து அரசின் அதிகார வரம்புக்குள் நுழைய துணிந்திருக்கிறது.

பிப்ரவரி 18ம் தேதி பிறப்பித்த இந்த தீர்ப்பு அதற்கான அதிகாரம் இல்லாத 3 நீதிபதி அமர்வால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு, அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சட்டம் சார்ந்த பல்வேறு விளக்கங்கள் தொடர்புடையது என்பதால் 5 நீதிபதி அமர்வு விசாரித்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பு முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது என்றே மரியாதை யுடன் நாங்கள் தெரிவிக்கிறோம். இந்த நீதிமன்றம் வகுத்துள்ளதும் மற்றும் அரசமைப்புச் சட்டம் மற்றும் இதர சட்டங்களில் இடம் பெற்றுள்ளதுமான காலம் காலமாக நடைமுறையில் உள்ள சட்ட கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன.

கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் அதில் தலையிட அதிகாரம் இல்லாத போதும் உச்ச நீதிமன்றம் தலை யிட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 72வது பிரிவு கொடுத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, குடி யரசுத் தலைவர் நிராகரித்து பிறப் பித்த உத்தரவில் உச்ச நீதி மன்றம் தலையிட்டது அதன் அதிகாரத் துக்கு அப்பாற்பட்டதாகும்.

குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்துவிட்டால், அந்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றத்துக்கு வரம்புக்குட்பட்ட அதிகாரமே இருக்கிறது. கருணை மனுமீது உரிய பரிசீலனை தரப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கருதி இருந்தால் மறு பரிசீலனைக்காக குடியரசுத் தலைவருக்கு திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். தாமதம் பிரச் சினையாக இருந்திருந்தால், அந்த மனு மீது விரைந்து முடிவு எடுக்கும்படி குடியரசுத் தலை வரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம்.

3 குற்றவாளிகளின் மரண தண்ட னையை ஆயுளாக குறைத்து தீர்ப்பு பிறப்பிக்கும்போது மத்திய அரசு வைத்த வாதங்கள் உரிய வகையில் பரிசீலிக்கப்படவில்லை என அந்த மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x