Published : 17 Jul 2018 10:47 AM
Last Updated : 17 Jul 2018 10:47 AM

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு?- எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் தெலுங்கு தேசம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை நாடாளுமன்ற மழைக்கால  கூட்டத்தொடரில் மீண்டும் வலியுறுத்த தெலுங்கு தேசம் கட்சி கட்சி முடிவு செய்துள்ளது. இதையொட்டி திமுக, தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஆகிய கட்சிகளின் ஆதரவை அக்கட்சி நேற்று கோரியது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, புதிய தலைநகரம் உருவாக்க போதிய நிதியுதவி,  விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம், கடப்பாவில் இரும்பு தொழிற்சாலை, போலாவரம் அணைக்கட்டு கட்ட முழு நிதி

யுதவி, பல்வேறு உயர் கல்வி திட்டங்களுக்கு அனுமதி என பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலப் பிரிவினை மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 2014 தேர்தலில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தது. அப்போது ஆந்திராவுக்கு 10 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என பாஜக உறுதி அளித்துள்ளதாக தெலுங்கு தேசம் கூறியது. ஆனால் சிறப்பு அந்தஸ்துக்கு பதிலாக சிறப்பு நிதி அளிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் கூறியதால் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி கடந்த ஆண்டு வெளியேறியது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்

மானம் கொண்டுவரவும் தெலுங்கு தேசம் முயற்சி செய்தது.  இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் அதிமுக, டிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் மாநிலப் பிரச்சினைகளுக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. நம்பிக்கையில்லா தீர்மான முயற்சி தோல்வி அடைந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை (ஜூலை 18) தொடங்க உள்ளது. இதில் மத்திய அரசுக்கு எதிராக தங்களின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவை தெலுங்கு தேசம் திரட்டி வருகிறது. இதையொட்டி சென்னையில் திமுக எம்.பி. கனிமொழியை தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் நேற்று சந்தித்துப் பேசினர். இதுபோல் ஹைதராபாத்தில் டிஆர்எஸ் கட்சி எம்.பி. கே.கேசவராவை அவரது வீட்டில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் சந்தித்தனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

வரும் மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு  மீண்டும் நெருக்கடி கொடுக்கப் போவதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர். இதனால் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x