Published : 15 Jul 2018 05:27 PM
Last Updated : 15 Jul 2018 05:27 PM

பதிவு செய்யாவிட்டால் சிறை: வாட்ஸ் அப் குரூப்களுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு திடீர் உத்தரவு

வாட்ஸ் அப் குரூப்களை அரசிடம் பதிவு செய்த பின்தான் நடத்த வேண்டும், செய்திகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள அனைத்து அட்மின்களும், தங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்கள் குறித்து போலீஸாருக்கு தெரிவித்து, தங்கள் வசிப்பிடத்துக்கு அருகே இருக்கும் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யாமல் வாட்ஸ் அப் குரூப்களை நடத்தினால், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ்(யுஏபிஏ) கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிஸ்த்வார் மண்டல போலீஸ் ஆணையர் அங்கிரீஸ் சிங் ராணா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

''வாட்ஸ் அப் குரூப்கள் வைத்திருப்பவர்கள் அனைவரும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வருவார்கள். இவர்கள் அனைவருக்கும், ஐடி சட்டம், ஆர்பிசி, சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடந்த 29-ம் தேதி சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செய்திகளையும், சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் இதன்படி, வாட்ஸ் அப் குரூப்பில் செய்திகளைப் பரப்பினால், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

வாட்ஸ் அப் குரூப்கள் வைத்திருப்போர், குரூப்கள் தொடங்க விரும்புவோர் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற்று, பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமல், தவறான செய்திகளை பரப்பும் வாட்ஸ் அப் அட்மின், உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், சட்ட நடவடிக்கை பாயும். வாட்ஸ் அப் குரூப்களில் தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள் மட்டுமே சேர்க்க வேண்டும்.

இதன்படி வாட்ஸ் அப் குரூப்கள் வைத்திருக்கும் அட்மின்கள், தங்களின் வசிப்பிடச் சான்றிதழ், ஆதார் கார்டு நகல், தொலைபேசி எண், உறுப்பினர்கள் எண்ணிக்கை, அவர்கள் செல்போன் எண் ஆகியவற்றை போலீஸ்நிலையத்தில் அளிக்க வேண்டும்.

அதன்பின் போலீஸார் அளிக்கும் சான்றிதழ் பெற்றபின் வாட்ஸ்அப் குழுக்களை தொடரலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிஷ்தாவர் மாவட்ட போலீஸ் எஸ்பி அப்ரார் அகமது கூறுகையில், ''ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள் தீவிரவாதிகளைப் புனிதப்படுத்தி செய்திகள் வெளியிடுவது, அரசுக்கு எதிராகச் செய்திகள் வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றைக் கண்டுபிடித்து தடுத்துள்ளோம். இது மேலும் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தக் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறோம்.

ஏற்கெனவே ஐபிசி 505 பிரிவின் கீழ் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம். இதுவரை 25 குழுக்கள்வரை பதிவு செய்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.

ஜம்முவில் உள்ள ஷியா முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் ஆஷிக் ஹூசைன் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் ஏராளமான வாட்ஸ் அப் குரூப்கள் பசுப்பாதுகாப்பை வலியுறுத்தி செய்திகள் வெளியிட்டு, பரப்பி வருகின்றன. அவர்களைத் தடுக்கவில்லை, எதிராக நடவடிக்கை இல்லை. ஆனால், முஸ்லிம்கள் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டுவரை இலக்காக வைக்கப்பட்டுள்ளனர்”எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டும் இதே போன்று வாட்ஸ் அப் குரூப்களைப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் சில மாதங்களுக்குப் பின்அமைதி திரும்பிய பின், வதந்திகள், பொய்யான செய்திகள் கட்டுப்படுத்தப்பட்டபின் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“மக்களின் வலிகளையும் சந்தோஷத்தையும் பாடுவதற்குத்தான் நாங்க இருக்கோம்” - செந்தில் கணேஷ் பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x