Published : 13 Jul 2018 07:30 AM
Last Updated : 13 Jul 2018 07:30 AM

தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக்கிய இளைஞர்: ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் விபரீத முடிவு

ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், அந்த தற்கொலை நிகழ்வை தனது பேஸ்புக்கில் நேரலையாகவும் அவர் பதிவிட்டிருக்கிறார். அதை 2,750 பேர் பேஸ்புக்கில் பார்த்தும், எச்சரிக்காமல் விட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் முன்னா குமார் (24). பிஎஸ்சி பட்டதாரியான இவர், இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தில் இருந்துள்ளார். இதற்காக, ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் உற்சாகமாக பங்கேற்று வந்தார். ஆனால், 5 முறை ராணுவ நுழைவுத் தேர்வில் பங்கேற்றும் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடந்த சில தினங்களாகவே அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். நண்பர்கள், குடும்பத்தினரிடம் கூட சரியாக பேசாமல் சோகமாக இருந்துள் ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, தமது பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்புக்கான பக்கத்தில் அவர் பேசினார். அதில், ராணுவத் தேர்வுகளில் தம்மால் வெற்றிபெற முடியவில்லை என்றும், இதனால் தமது பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார். பின்னர், சிறிது நேரத்தில் அங்கிருந்த தூக்குக் கயிற்றில் தொங்கி அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தக் காட்சிகள் அவரது பேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பானது. இந்த வீடியோவை 2,750 பேர் பார்த்திருக்கின்றனர். ஆனால், ஒருவர் கூட இதுதொடர்பாக போலீஸாருக்கோ அல்லது முன்னா குமாரின் பெற்றோருக்கோ தகவல் தெரிவித்து அவர்களை எச்சரிக்கவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆக்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவர், போலீஸ் அதிகாரி கருத்து

மூத்த மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியன்: இளைஞர் தற்கொலை செய்யப்போவதை நேரலையில் பார்த்தும் யாரும் தகவல் தெரிவிக்காதது சமூக பொறுப்பு குறைந்து வருவதையே காண்பிக்கிறது. எந்த தற்கொலையையும் தடுக்க முடியும். தற்கொலை செய்த இளைஞரை உடனடியாக அவரது நண்பர்கள், உறவினர்கள் யாரேனும் தொடர்புகொண்டு குறைகளை கேட்டிருந்தாலே அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார். பொதுவாக தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் சோர்ந்து காணப்படுவார்கள். அவ்வாறு இருப்பவர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டு, தன்னம்பிக்கை அளித்தாலே போதும். பெரும்பாலான தற்கொலைகளை தவிர்த்துவிடலாம்.

ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி:

இளைஞரின் தற்கொலையை தடுக்க வாய்ப்பிருந்தும் நேரலையில் பார்த்தவர்கள் தடுக்கத் தவறியுள்ளனர். இன்றைக்குள்ள தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி எந்த மூலையிலும் இருப்பவரையும் உடனடியாக தொடர்புகொள்ள முடியும். நேரலையில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கோ, தன்னார்வ அமைப்புகளுக்கோ தகவல் தெரிவித்திருக்கலாம். அவ்வாறு தெரிவித்திருந்தால், அந்த இளைஞரின் செல்போன் எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்து நேரடியாக சென்று தடுத்திருக்க முடியும். அதற்கிடையே, நெருங்கிய நண்பர்கள் மூலம் அந்த இளைஞரிடம் பேச்சு கொடுத்து மனநிலையை நிச்சயம் மாற்றியிருக்க முடியும். அத்தனை பேர் பார்த்தும், ஆறுதல் சொல்ல ஆளில்லாததால்தான் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x