Published : 12 Jul 2018 11:22 AM
Last Updated : 12 Jul 2018 11:22 AM

மீன்களில் கலந்துள்ள பார்மாலின்: பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வர அசாம் அரசு தடை

அசாம் மாநிலத்திற்கு, பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கடல் மீன்களில் பார்மாலின் கலந்து இருப்பது உறுதியாகியுள்ளதால் அந்த மீன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பிரதானமான சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு மீன் விற்பனை சந்தைகளில் இருந்து இரு வெவ்வேறு நாட்களில் வாங்கப்பட்ட 30 மீன் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், 11 மாதிரிகளில் மனிதர்களுக்குப் புற்று நோயை உண்டாக்கக் கூடிய கொடிய வேதிப்பொருளான பார்மாலின் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வுகள் அனைத்தும், தி இந்துவுக்காக(ஆங்கிலம்) தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்களால் நடத்தப்பட்டது. தமிழகத்தில் மீன்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் பார்மலின் இருப்பது முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்மாலின் எனப்படுவது பதப்படுத்தி மற்றும் கிருமிநாசினியாகும். நிறமற்ற, வண்ணங்கள் அற்ற ஒரு வேதிப்பொருளாகும். இந்த வேதிப்பொருளைத் தண்ணீரில் கலந்து, நாம் மாமிசத்தையோ அல்லது, மீன்கள், உடலின் ஒருபகுதி என எதை வைத்தாலும் அது அழுகாமல், கெட்டுப்போகாமல் நாட்கணக்கில் இருக்கும். இந்த பார்மாலின் மனித உடற்கூறு ஆய்விலும் பயன்படுத்தப்படுகிறது.

பார்மாலின் கலக்கப்பட்ட உணவுப்பொருட்களை மனிதர்கள் உட்கொள்ளும் போது, கண்கள், தொண்டை, தோல், வயிறு பகுதிகளில் எரிச்சல், நமச்சல் ஏற்படும். நீண்டகாலத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது, கிட்னி, கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியாக ரத்தப் புற்றுநோயை உண்டாக்கும். மீன்கள் அழுகிவிடுவதைத் தவிர்ப்பதற்காக பார்மாலின் எனப்படும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த தகவல் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வேறு சில மாநிலங்களிலும் மீன்களில் பார்மாலின் கலந்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அசாம் மாநிலத்திலும் வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களில் பார்மாலின் இருப்பது தெரிய வந்துள்ளது.

கடல் இல்லாத நிலையில் கடல் மீன்கள், மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அசாம் மாநிலங்களில் விற்பனைக்காக கடல் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த மீன்களை சோதனை செய்ததில் பார்மாலின் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வெளி மாநிலங்களில் இருந்து பார்மாலின் கலந்த மீன்கள் விற்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கவுகாத்தி உள்ளிட்ட பல நகரங்களில் நேற்று அதிகாரிகள் சோதனை செய்தனர். தடையை மீறி மீன்களை விற்பனை செய்வோருக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அசாம் மாநில சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிஜூஷ் கசாரிகா கூறுகையில், “பார்மாலின் கலந்த மீன்களை சாப்பிடும் மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதால் வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதியாகும் மீன்களுக்கு தடை விதித்துள்ளோம். மீன்களை சோதனை செய்து பார்மாலின் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்ட பின்னரே மீண்டும் அனுமதி வழங்குவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x