Published : 12 Jul 2018 09:09 AM
Last Updated : 12 Jul 2018 09:09 AM

ராணுவ அதிகாரிகள், வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை; ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: தலைமை தளபதி பிபின் ராவத் இணையதளத்தில் கடிதம்

புதுடெல்லி

ஊழலில் ஈடுபடுபவர்கள் ராணுவத்தில் எந்த பதவியிலிருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார்.

ராணுவத்தில் உள்ளவர்களுக்காக பல்வேறு உத்தரவுகளை தலைமைத் தளபதி பிபின் ராவத் சமீபத்தில் பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக ராணுவ இணையதளம் மூலம் அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

ராணுவத்தில் ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். உயர் பதவி, கீழ் பதவி என்ற பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றத்தைப் பொருத்து அவர்களுக்கு பென்ஷன் இன்றி பதவி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ராணுவ வீரர்கள் தங்களுக்குக் கொடுத்த பணிகளைச் சரிவரச் செய்தால் போதும். உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் முகஸ்துதி பாடத் தேவையில்லை.ராணுவம் சார்ந்த விழாக்கள், நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் இருக்கக்கூடாது.மூத்த ராணுவ அதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லி நியமனம் தவிர்க்கப்படவேண்டும்.

ராணுவ கேண்டீன்களில் மதுவகைகள், மளிகைப் பொருட்கள் விற்பனையில் முறைகேடு இருக்கக்கூடாது. கேண்டீன் பொருட்களானது அங்கீகாரம் பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துக்கு மட்டுமே கிடைக்கவேண்டும். இந்த உத்தரவை ராணுவ கேண்டீன்கள் பின்பற்ற வேண்டும்.

மேலும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன. பூரி, பகோடா, இனிப்பு வகைகளில் கட்டுப்பாடு கொண்டு வரப்படுகிறது. இந்த உணவு வகைகளைத் தவிர்த்து அதற்குப் பதிலாக உடலுக்கு ஆரோக்கியமான உணவு வகைகள் சேர்க்கப்படும்.

ராணுவ வீரர்கள் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக தங்களது பணிகளைச் செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தனது உத்தரவில் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த உத்தரவு புதிதல்ல என்று ராணுவ வட்டாரத்தில் சிலர் தெரிவித்தனர்.சிலரோ ராணுவத்துக்குள் ஒழுக்க நெறியை மேம்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x