Published : 11 Jul 2018 03:47 PM
Last Updated : 11 Jul 2018 03:47 PM

தன்பாலின உறவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிட்டது மத்திய அரசு

தன்பாலின உறவு குற்றமா இல்லையா என்று முடிவெடுக்கும் உரிமையை உச்ச நீதிமன்றத்திடமே விட்டு விடுவதாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

2013-ல் தன்பாலின உறவு கிரிமினல் குற்றமே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இன்றைய விசாரணையில்தான் மத்திய அரசு உச்ச நீதிமன்ற முடிவுக்கே விட்டு விடுவதாகத் தெரிவித்துள்ளது.

ஆனால் தங்களுக்கான இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் தகாத உறவுகள் போன்ற வக்கிரங்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் கூறும்போது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் உதாரணமாக ஒருவர் தன் சகோதரியைத் தேர்வு செய்து விடக்கூடாது இது இந்து தர்மத்துக்கு விரோதமானது என்றார்.

ஆனால் மிகச்சரியாக இடைமறித்த நீதிபதி சந்திராசூட், உறவுகளின் இயல்பு மற்றும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 21, அதாவது வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் கீழ் அந்த உறவுக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றித்தான் இந்த வழக்கு என்று பதிலளித்தார். அதாவது உறவுக்கு ஒப்புக்கொள்ளும் இருவர் கிரிமினல் குற்றம் இழைக்கவில்லை என்பதற்கான விவகாரமாகும் இது என்றார்.

நீதிபதி ரோஹிங்டன் நாரிமன் கூறும்போது, அடிப்படை உரிமை என்பதன் உள்ளடக்கத்தை தீர ஆய்வு செய்ய உள்ளது அமர்வு என்றார்.

“ஒப்புக்கொண்ட இரண்டு வயது வந்தோரின் உறவு என்பதே அரசியல் சாசன 21-ன் வெளிப்பாடுதானா என்பதை ஆய்வு செய்கிறோம். உறவுகளின் இயல்பு பற்றித்தான் பரிசீலிக்கிறோம், திருமணம் பற்றி பேசவில்லை” என்று சந்திராசூட் விளக்கமளித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “தன்பாலின உறவாளர்கள் மெரின் ட்ரைவ் கடற்கரையில் மகிழ்ச்சியுடன் நடைபயிலும் போது போலீஸாரால் தொந்தரவு செய்யப்பட கூடாது. உறவைப் பாதுகாக்க விரும்புகிறோம்.” என்றார்.

இந்நிலையில் தங்கள் 4 பக்க பிரமாணப்பத்திரத்தை நீதிபதிகள் அமர்விடம் கையளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா, “நீதிமன்ற அமர்வின் கருத்துக்கே விட்டு விடுகிறோம்” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x