Published : 11 Jul 2018 03:01 PM
Last Updated : 11 Jul 2018 03:01 PM

70 ஆண்டுகளாக விவசாயிகளை ஏமாற்றியுள்ளது காங்கிரஸ், வாக்கு வங்கிகளாக பயன்படுத்தியது: பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு

70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை, அவர்களை ஏமாற்றி வெறும் வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நரேந்திர மோடி கூறியதாவது:

கடந்த 70 ஆண்டுகளாக விவசாயிகள் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வைத்திருந்த கட்சி விவசாயிகளின் கடின உழைப்பை அங்கீகரிக்கவில்லை. விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. கட்சியும் ஒரேயொரு குடும்பத்தின் நலன்களுக்காகப் ‘பாடுபட்டது’.

காங்கிரஸ் கட்சி விவசாயிகளை வாக்குவங்கியாகப் பயன்படுத்தியது. இப்போதுதான் நடப்பு மத்திய அரசு கடினமாக உழைத்து இந்தச் சூழலை மாற்ற பணியாற்றி வருகிறது.

காங்கிரஸும் கூட்டணி கட்சிகளும் தூக்கத்தை இழந்துள்ளனர். நாட்டில் விவசாயிகள் நிம்மதியாக உறங்குவது காங்கிரஸ் கட்சியினால் தாங்க முடியவில்லை.

விவசாயிகள் முன்னால் நான் தலைவணங்குகிறேன். வேளாண் உற்பத்தியில் பல சாதனைகளை உடைத்துள்ளனர். இதற்காகவும் இவர்களது கடின உழைப்புக்காகவும் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

விவசாயிகள் மட்டுமல்ல ராணுவ வீரர்களின் நலன்களுக்காகவும் எமது அரசு பாடுபட்டு வருகிறது, இதற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2022-ல் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும். அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம்.

விவசாயிகளுக்காக இன்னும் அதிக திட்டங்கள் கொண்டு வருவோம், இதிலிருந்து பின் வாங்கப்போவதில்லை. இன்று என் முன்னால் இவ்வளவு விவசாயிகள் திரண்டுள்ளீர்கள் இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

இவ்வாறு பேசினார் மோடி.

நாடு முழுதும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டு போராடி வருகின்றனர். பல எதிர்க்கட்சிகளும் விவசாயிகள் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாக பிரதமர் மோடி மீது விமர்சனம் வைக்கும் நிலையில் மோடி இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x