Published : 11 Jul 2018 02:34 PM
Last Updated : 11 Jul 2018 02:34 PM

‘‘தாஜ்மஹாலை பாதுகாக்க முடியவில்லை என்றால் இடித்து தள்ளிவிடுங்கள்’’ - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

உலக அதிசயங்களில் ஒன்றான, இந்தியாவின் அரிய பொக்கிஷமான தாஜ்மஹாலை பாதுக்காக முடியவில்லை என்றால் அதனை மூடிவிடுங்கள் அல்லது இடித்துதள்ளி விடுங்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர். தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் காற்று மாசு ஏற்பட்டு தாஜ்மகாலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட தாஜ்மஹால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு மாறி விட்டது.

தாஜ்மஹாலை உரியமுறையில் பாதுகாக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாகவும், இதுகுறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கலானது. இந்த வழக்கு தொடர்பாக தொல்பொருள் ஆய்வுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு உத்தரவுகள் பிறக்கப்பட்டபோதிலும் அவற்றை செயல்படுத்தவில்லை. தாஜ் காரிடார் என்ற பெயரில் அந்த பகுதியில் தொழிற்சாலைகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

‘‘உலகின் அரிய பொக்கிஷங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் இருந்து வருகை தருகின்றனர். இதன் மூலம் பெரிய அளவில் அந்நிய செலவாணியை மத்திய அரசு ஈட்டி வருகிறது. ஈபில் டவர் உட்பட பிறநாடுகளில் உள்ள உலக அதிசயங்களை பாதுகாக்க எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது நமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதேசமயம் தாஜ்மஹாலை பாதுகாக்க அத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவில் எத்தனையோ அதிசய பொக்கிஷங்கள் இருந்தாலும், அவற்றில் தாஜ்மஹால் தனித்துவம் மிக்கது. தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டும் இழப்பல்ல. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இழப்புதான். தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம்.

தாஜ்மஹால் பாதுகாப்பில் உரிய அக்கறையின்றி மத்திய அரசு செயல்படுகிறது. அதுபோலவே தாஜ்மஹாலை பாதுகாக்க நீண்டகால அடிப்படையில் திட்டத்தை உத்தர பிரதேச அரசு தயாரிக்கவில்லை. இந்த அக்கறை இன்மையால் தாஜ்மஹாலின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குரியாகி வருகிறது’’ என நீதிபதிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x