Published : 11 Jul 2018 12:59 PM
Last Updated : 11 Jul 2018 12:59 PM

தாய்லாந்தில் சிறுவர்கள் மீட்பு: குகையில் தண்ணீரை வெற்றிகரமாக வெளியேற்றிய இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள்

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் இந்தியாவும் பங்களித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கு சென்று குகையில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட விவரம் தெரிய வந்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10கி.மீ நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். தாய்லாந்து மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட சிறுவர்கள் கால்பந்து அணி கடந்த 23-ம் தேதி இந்தக் குகைக்கு சென்றனர். இந்த சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றார்.

ஆனால், இந்தக் குகை குறித்து அதிகம் அறிந்திராத இந்தச் சிறுவர்களும், துணைப் பயிற்சியாளரும் உள்ளே சென்று மாட்டிக்கொண்டனர். இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்து கொண்டது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.

தாய்லாந்து கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்பு குழுவினர் என பெரிய குழுவே அவர்களை மீட்க போராடியது. இறுதியாக அவர்கள் அனைவரும், மூன்று பிரிவாக மீட்கப்பட்டனர். குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரையும் உயிருடன் வெற்றிகரமாக மீட்டு வந்ததை உலகம் முழுவதும் வரவேற்று வருகின்றனர். மீட்பு குழுவினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இந்நிலையில் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் முயற்சியில் இந்தியாவின் பங்களிப்பும் இருந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. குகையில் தேங்கி இருந்த தண்ணீரை சில நாட்களாக வெளியேற்றிய பிறகே மீட்பு குழுவினர் உள்ளே சென்று சிறுவர்களை மீட்டு வந்தனர். குகையில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் தொழில்நுட்பத்தை இந்திய நிறுவனம் வழங்கியுள்ளது.

புனேயை சேர்ந்த ‘கிரிலோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட்’ என்ற அந்த நிறுவனம், தண்ணீ்ரை இறைக்கும் மோட்டர்கள், தண்ணீரை வேகமாக வெளியேற்று தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாகும். குகையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற பல நாடுகளின் உதவியை தாய்லாந்து அரசு கோரியது. அதில் இந்தியாவிடமும் உதவி கோராப்பட்டுள்ளது.

இதையடுத்து தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இந்திய அரசை தொடர்பு கொண்டு தகவல் திரட்டியுள்ளனர். இந்தியாவில் தண்ணீரை வேகமாகவும், சிக்கலான இடங்களில் இருந்து திறனுடன் தண்ணீரை இறைத்து வெளியேற்றும் தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்களின் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு அதில் கிரிலோஸ்கர் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளப்பட்டது.

இதை ஏற்று கிரிலோஸ்கர் நிறுவனமும் உடனடியாக தனது தொழில்நுட்ப வல்லநர்களை தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தது. ஜூலை 5ம் தேதி அந்த குகைக்கு சென்ற இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர். சமதளம் இல்லாத, ஏற்றமும், இறக்கமும் கொண்ட சிறு சிறு பள்ளங்கள் உள்ள அந்த குகையில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவது பெரும் சவலாக இருந்தது.

இதுபோன்ற இடத்தில் குழாய்களை வளையும் தன்மை கொண்ட குழாய்களை செலுத்தி அதன் மட்டத்திற்கு ஏற்ப அமைத்து தண்ணரை உறிஞ்சும் தொழில்நுட்பம் தொடர்பாக இந்திய வல்லுநர் குழு விளக்கியது. பின்னர் இந்திய குழுவினர் வழிகாட்டுதலுடன் புதியமுறையில் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

மேலும், அதற்கு ஏற்ற வகையில் பல இடங்களில் மோட்டர் பம்புகள் பொருத்துப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் பிறகு வேகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதுடன், சகதியும், சேறும் மிகுந்த தண்ணீரையும் வெளியேற்ற முடிந்தது. இதனால் இரண்டு நாட்களுக்குள் தண்ணீர் பெருமளவு வெளியேற்றப்பட்டு, மீட்பு குழுவினர் உள்ளே செல்லும் அளவிற்கு சூழல் மாறியது. இதன் பிறகே சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மீட்பு குழுவினர் அதிரடியாக உள்ளே நுழைந்து சிறுவர்களை மீட்டு வந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x