Published : 09 Jul 2018 08:30 AM
Last Updated : 09 Jul 2018 08:30 AM

பிஹார் கலவர வழக்கில் சிறையில் உள்ள விஎச்பி தொண்டர்களுடன் அமைச்சர் சந்திப்பு

பிஹார் கலவர வழக்கில் சிறையில் உள்ள பஜ்ரங் தளம், விஎச்பி தொண்டர்களை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று சந்தித்துப் பேசினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூனில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அலிமுதின் அஸ்கர் அன்சாரி என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த ராம்கர் மாவட்ட நீதிமன்றம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அவர்கள் அண்மையில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.

ஜார்க்கண்டின் ஹஸாரிபாக்கில் உள்ள மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டுக்கு அவர்கள் சென்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அடுத்த சர்ச்சை

கடந்த 2017-ம் ஆண்டு ராம நவமியின்போது பிஹாரின் நவேடா நகரில் கலவரம் ஏற்பட்டது. இந்த வழக்கில் பஜ்ரங் தளத்தின் மூத்த தலைவர் ஜிதேந்திர பிரதாப், விஎச்பியின் மூத்த தலைவர் கைலாஷ் விஸ்வகர்மா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நவேடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று நவேடா சிறைக்கு நேரில் சென்று கலவர வழக்கில் சிறையில் உள்ள பஜ்ரங் தளம், விஎச்பி தொண்டர்களை சந்தித்துப் பேசினார். இதன்பின் அவர் நிருபர்களிடம் பேசியபோது, “ஜிதேந்திர பிரதாப், கைலாஷ் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஹார் அரசு இந்துக்களை ஒடுக்கி வருவது வேதனையளிக்கிறது. இத்தகைய நடவடிக்கையை மாநில அரசு கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார். கலவர வழக்கில் சிறையில் உள்ளவர்களை மத்திய அமைச்சர் நேரில் சந்தித்துப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிஹாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மை காலமாக இரு கட்சிகளிடையே விரிசல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x