Last Updated : 04 Jul, 2018 04:04 PM

 

Published : 04 Jul 2018 04:04 PM
Last Updated : 04 Jul 2018 04:04 PM

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகளின் தங்களின் உற்பத்திச் செலவில் இருந்து 50 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியிலும், விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது, அப்போது கரீப் பருவத்தில் 14 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, பாஜக அளித்த வாக்குறுதியில் விவசாயிகள் தங்களின் உற்பத்திச் செலவில் இருந்து 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தது. அந்த வாக்குறுதியை நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, இப்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டு ரூ.1,750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல் ஏ ரகம் ரூ.160 உயர்த்தப்பட்டு, ரூ.1750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் சாதாரண நெல் ரகம் குவிண்டால் ஒன்றுக்கு 1550 ரூபாயும், ஏ ரக நெல்லுக்கு 1,590 ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பருத்திக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 4,020லிருந்து ரூ.5,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீண்ட ரக பருத்திக்கு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,320 வழங்கப்பட்ட நிலையில், அது ரூ.5450 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பருப்பு வகைகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் துவரம் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,450 வழங்கப்பட்ட நிலையில், அது ரூ.5,675 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாசிப்பருப்பு, பயறு வகைகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,575 வழங்கப்பட்ட நிலையில், அது ரூ.6,975ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டு இருப்பதால், உணவுக்கான மானியத்தொகை ரூ.11 ஆயிரம் கோடி கூடுதலாகச் செலவாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் நெல் பயிரிடுவதுதான் பிரதானமாகும். நெல் பயிரிடுதலுக்கான பணிகள் பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவிட்டன. இந்த சூழலில் அரசின் வரவேற்பு விவசாயிகளுக்கு ஓரளவுக்கு நிம்மதி அளிக்கும்.

விவசாயிகளின் பிரச்சினை, கடன் சிக்கல், உற்பத்தி பொருட்களுக்கு விலை கிடைக்காதது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வேளாண் ஆலோசனை அமைப்பான சிஏசிபி நெல் உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அந்த அமைப்பு பரிந்துரைத்த தொகையைக் காட்டிலும், மத்திய வேளாண் துறை அமைச்சகம் கூடுதலாக தொகையை ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x