Published : 24 Jun 2018 09:58 AM
Last Updated : 24 Jun 2018 09:58 AM

முன்பதிவுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சிறப்பு அனுமதி கோருகிறார் ராகுல்

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு முன்பதிவு செய்வதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், தனக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்து, பவுத்தம், பான் (திபெத் மதம்) மற்றும் ஜெயின் ஆகிய 4 மதத்தினரின் புனிதத் தலமாக கைலாஷ் மானசரோவர் மலை விளங்குகிறது. அங்கு புனித யாத்திரை செல்வதற்கான முன்பதிவு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி மார்ச் 20-ம் தேதி முடிவடைந்தது. அத்துடன் கைலாஷ் யாத்திரை கடந்த 8-ம் தேதி தொடங்கிவிட்டது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், கைலாஷ் யாத்திரை செல்வதற்காக தனக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று ராகுல் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரத்தினர் கூறும்போது, “ஆம் இது உண்மைதான். மிகவும் கரடுமுரடான, உறையும் வெப்பநிலையுடன் கூடிய, மிகவும் உயரமான கைலாஷ் மானசரோவருக்கு செல்ல ராகுல் விரும்புகிறார்” என்றனர்.

எனினும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி டெல்லியிலிருந்து வந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஆனால் விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார். அன்றைய தினம் நடைபெற்ற பிரச்சாரத்தில் ராகுல் பேசும்போது, “விமானம் நடு வானில் பிரச்சினைக்குள்ளானபோது, பத்திரமாக தரையிறங்கினால் கைலாஷ் மானசரோவருக்கு வருவதாக வேண்டிக் கொண் டேன்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015-ல் உத்தராகண்டில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு ராகுல் சென்றார். இதையடுத்து, குஜராத் மற்றும் கர்நாடக தேர்தலின்போது, கோயில்களுக்கு சென்று வழிபட்டார். இந்து வாக்காளர்களைக் கவருவதற்காகவே ராகுல் கோயில்களுக்குச் செல்கிறார் என பாஜகவினர் விமர்சனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாகவே அவர் மானசரோவர் செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x