Published : 24 Jun 2018 09:56 AM
Last Updated : 24 Jun 2018 09:56 AM

ரூ.3,866 கோடியில் நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்: வளர்ச்சிப் பாதையில் மத்திய பிரதேச மாநிலம்- முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு பிரதமர் மோடி பாராட்டு

வளர்ச்சிப் பாதையில் மத்தியபிரதேச மாநிலத்தைக் கொண்டு சென்ற முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், மோகன்புரா நீர்ப்பாசனத் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் ரூ.3,866 கோடியில் பிரம்மாண்டமான அணையும், கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 727 கிராமங்கள் பாசன வசதி பெறும். திட்டத் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு வளம் பெற்று வருகிறது. நாட்டிலேயே தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது ராஜ்கரில் தொடங்கப்பட்டுள்ள நீர்ப்பாசனத் திட்டமானது மிகவும் அத்தியாவசியமானது. இந்தத் திட்டத்தை பொத்தானை அழுத்தி எளிதாகத் தொடங்கி வைத்துவிட்டேன். ஆனால் இத்திட்டம் முழுமை பெற உழைத்தவர்கள் இந்தத் தொழிலாளர்கள்தான். அவர்களுக்குத்தான் இந்த முழு பெருமையும் சென்று சேரும். இரவு பகல் பாராமல் உழைத்த தொழிலாளர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் ம.பி. மிகவும் பின்னோக்கி சென்றுகொண்டிருந்தது. முதல்வராக சவுகான் பொறுப்பேற்றதும், மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளார். நோயாளி நிலையில் இருந்த மாநிலத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றியிருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.

இனி வரும் ஆண்டுகளில் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக ரூ.70 ஆயிரம் கோடியை மத்தியபிரதேச அரசு செலவு செய்யும். இதற்காக மத்திய அரசும் உதவி செய்யும்.

நாடு போற்றும் நல்லாட்சியை பாஜக தலைமையிலான அரசு கடந்த 48 மாதங்களில் தந்துள்ளது. ஆனால் உண்மையான கள நிலவரம் புரியாமல் சிலர் பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். அதை மக்கள் நம்பமாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மாநில அரசின் நகர்ப்புற போக்குவரத்து சேவைத் திட்டத்தை இந்தூரில் தொடங்கிவைத்தார். சுத்ர சேவா என்ற பெயரில் மாநிலத்தின் 20 நகரங்களில் இந்த பேருந்து சேவையை அரசு வழங்கவுள்ளது. மேலும் ரூ.278.26 கோடி செலவில் 23 வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x