Last Updated : 24 Jun, 2018 09:55 AM

 

Published : 24 Jun 2018 09:55 AM
Last Updated : 24 Jun 2018 09:55 AM

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி கொலை: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக மாநில சிக்கமகளூருவில் பாஜக நிர்வாகி முகமது அன்வர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்க‌மகளூருவை சேர்ந்தவர் முகமது அன்வர் (47). இவர் சிக்கமளூரு புறநகர் மாவட்ட பாஜக செயலாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கவுரி கால்வாய் அருகே இவர் சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் முகமது அன்வரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, அருகில் உள்ள ம‌ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முகமது அன்வர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த சிக்கமகளூரு போலீஸார், முகமது அன்வரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிக்கமகளூரு பாஜக எம்.பி. ஷோபா கரந்தலாஜே தலைமையில் பாஜகவினர் நேற்று சிக்கமகளூரு காந்தி சிலை எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஷோபா கரந்தலாஜே பேசும்போது, “கர்நாடகாவில் பாஜகவினரும், இந்து அமைப்பினரும் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முகமது அன்வர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வழக்கில் குற்றவாளிகளை போலீஸார் விரைந்து கைது செய்ய வேண்டும்” என்றார்.

இதனிடையே சிக்கமகளூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை கூறும்போது, “முதல்கட்ட விசாரணையில் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக இந்தக் கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அரசியல் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டதாக தெரியவில்லை. எனினும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x