Last Updated : 21 Jun, 2018 05:50 PM

 

Published : 21 Jun 2018 05:50 PM
Last Updated : 21 Jun 2018 05:50 PM

அமித் ஷா இயக்குநராக இருக்கும் வங்கியில் பணமதிப்பு நீக்கத்தின்போது, 5 நாட்களில் ரூ.745 கோடி டெபாசிட்: ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல்

கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தின் போது, பாஜக தலைவர் அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கியில், செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் 5 நாட்களில் ரூ. 745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் முதல் முறையாக குஜராத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் பெற்ற டெபாசிட் விவரங்கள் 2 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தின் போது முதல் 5 நாட்கள் மட்டுமே கூட்டுறவு வங்கிகள் செல்லாத ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டு, அதன்பின் ரிசர்வ் வங்கி தடை செய்தது. இந்த 5 நாட்களில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் (ஏடிசிபி) ரூ.745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மனோரஞ்சன் ராய் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பணமதிப்பு நீக்கத்தின் போது வங்கிகளில் பெறப்பட்ட ரூபாய் விவரங்கள் குறித்து கேட்டிருந்தார். அவருக்கு நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் எஸ் சரவணவேல் பதில் அளித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டுகள், ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில், கடந்த 2016, நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார். அதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன.

அப்போது குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களில் ஒருவராக பாஜக தலைவர் அமித் ஷா இருந்து வருகிறார். கடந்த 2000-ம் ஆண்டு இந்த வங்கியின் தலைவராக இருந்த நிலையில் இப்போது இயக்குநர்களில் ஒருவராகவே இருந்து வருகிறார்.

இந்த அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் கடந்த 2016, நவம்பர் 9-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மட்டும் ரூ.745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. ஆனால், 14-ம் தேதிக்குப் பின் கூட்டுறவு வங்கியில் யாரும் பணம் கொடுத்து மாற்றக்கூடாது என்ரு ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம்தேதிவரை அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் செய்யப்பட்ட ஒட்டுமொத்த டெபாசிட் ரூ.5 ஆயிரத்து 50 கோடியாகும். வங்கியில் நிகர லாபம் ரூ.14.31 கோடியாகும்.

இது தவிர்த்து, ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக ஜெயேஷ்பாய் விதால்பாய் ராதாதய்யா இருந்தார். இவர் குஜராத் மாநில முதல்வரும், பாஜகவைச் சேர்ந்த விஜய் ரூபானி அமைச்சரவையில் கேபினெட் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தார். இந்த ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.693.19 செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

குஜாராத் அரசியலில் ராஜ்கோட் என்பது மிக முக்கியமான ஒரு மையப்பகுதியாகும். இந்தத் தொகுதியில் இருந்து தான் பிரதமர் மோடி கடந்த 2001-ம் ஆண்டு தேர்வாகினார்.

இதில் குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால், மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியான குஜராத் மாநில கூட்டுறவு வங்கியில் செய்யப்பட்ட டெபாசிட்களைக் காட்டிலும், ரூ.1.11 கோடி அதிகமாக ராஜ்கோட், அகமதாபாத் கூட்டுறவு வங்கிகளில்தான் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

7 பொதுத்துறை வங்கிகள், 32 மாநில கூட்டுறவு வங்கிகள், 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகள், நாடு முழுவதும் 36-க்கும் அதிகமான தபால் நிலையங்களில் ரூ.7.91 லட்சம் கோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இது ரிசர்வ் வங்கி கூறிய ஒட்டுமொத்த டெபாசிட் தொகையான ரூ.15.28லட்சம் கோடியில் 52 சதவீதமாகும்.

இதில் நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள் பெற்ற டெபாசிட் விவரங்கள் வந்துள்ளன. ஆனால், பொதுத்துறை வங்கிகளில் 7 வங்கிகள் மட்டுமே தங்களுக்கு வந்த டெபாசிட் விவரங்களைத் தெரிவித்துள்ளன. மீதமுள்ள 14 அரசு வங்கிகள் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டன.

இதில் 7 பொதுத்துறை வங்கிகளில் ரூ.7.57 லட்சம் கோடியும், 32 மாநில கூட்டுறவு வங்கிகளில் ரூ.6,407 கோடியும், 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 22 ஆயிரத்து 271 கோடியும், 39 தபால் நிலையங்களில் ரூ.4,408 கோடியும் செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை முடிந்தபின் 15 மாதங்களுக்குப் பின் ரிசர்வ் வங்கி தங்களிடம் 99 சதவீதம் அல்லது ரூ.15.28 லட்சம் கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துவிட்டதாகத் தெரிவித்தது.

இது குறித்து மனோரஞ்சன் ராய் கூறுகையில், ''பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, மிகச்சில பொதுத்துறை வங்கிகளும், மிகச்சில மாவட்ட, மாநில கூட்டுறவு வங்கிகளுமே ஒட்டுமொத்த செல்லாத ரூபாய் நோட்டுகளில் பாதிக்கும் மேல் பெற்று இருக்கிறது என்ற தகவல் மிகவும் ஆபத்தானதாகும். இந்த விகிதத்தைப் பார்க்கும் போது, மற்ற 14 பொதுத்துறை வங்கிகள், கிராமத்தில் நகரத்தில் செயல்படும் வங்கிகள் , தனியார் வங்கிகள், உள்ளூர் கூட்டுறவு வங்கிகள், ஜன்கல்யான் வங்கிகள், கடன் கூட்டுறவு வங்கிகள்உள்ளிட்ட மற்றவைகள் போன்றவை பெற்ற டெபாசிட் விவரங்கள் கிடைக்கவில்லை.

இதில் மாநில கூட்டுறவு வங்கிகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து 2016, டிசம்பர் 30-வரை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது, ஆனால், மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 5 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது என்பது முரண்பாடாக இருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x