Last Updated : 21 Jun, 2018 02:41 PM

 

Published : 21 Jun 2018 02:41 PM
Last Updated : 21 Jun 2018 02:41 PM

இஸ்லாமியரை திருமணம் செய்ததால் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்த அதிகாரி: சுஷ்மாவிடம் முறையிட்ட பெண்

முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இந்து பெண் ஒருவரின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரி மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகே நொய்டாவைச் சேர்ந்த ரண்வீர் சேத் என்ற பெண், முகமது சித்திக் என்பவரை 2007-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். அங்குள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர்களுக்கு 7-வயது பெண் குழந்தை உள்ளது.

இருவரும் தங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக விண்ணப்பத்தினர். இதற்காக நொய்டாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அவர்கள் சென்றனர். அப்போது ரண்வீர் சேத்திடம் விசாரணை நடத்திய அதிகாரி, அவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்தது குறித்து விளக்கம் கேட்டார்.

இருவரும் மாறுபட்ட மதத்தை பின்பற்றுவது குறித்து பல்வேறு கேள்விகளை கேட்ட அதிகாரிகள், பெயரை மாற்றி அதனை அரசிதழில் வெளியிடடால் மட்டுமே பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியும் எனக் கூறினர். மேலும் ரண்வீர் சேத்தின் கணவர் முகமது சித்திக்கின் பாஸ்போர்ட்டையும் முடக்கி வைத்தனர். முரண்பட்ட தகவல்கள் இருப்பதாகவும் பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக ட்விட்டரில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு ரண்வீர் சேத் புகார் தெரிவித்தார். அதில், ‘‘நியாயமான ஆவணங்கள் இருந்தபோதும் வேறு ஒரு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் பாஸ்போர்ட் அதிகாரிகள் அநீதி இழைத்துள்ளனர்.

எனது கணவர் முஸ்லிம் என்பதால் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படவில்லை. எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு அவமானத்தை  நான் சந்தித்ததில்லை. நான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனது குடும்ப விஷயம். இதற்கான எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது அதிர்ச்சியை அளிக்கிறது’’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அதிகாரிக்கு விளக்கம் கோரி வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட இருவருக்கும் பாஸ்போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x