Published : 20 Jun 2018 05:58 PM
Last Updated : 20 Jun 2018 05:58 PM

நாளை சர்வதேச யோகா தினம்: பிரதமர் தலைமையில் டேராடூனில் பிரமாண்ட நிகழ்ச்சி

நாளை உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டேராடூனில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் 55 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐ.நா அறிவிப்பின்படி கொண்டாடப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாகவே இந்தியாவில் சர்வதேச யோகா தினம் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

2015-ம் ஆண்டு டெல்லி ராஜபாதையில் சர்வதேச யோகா தினத்தில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 35,985 பேர் கலந்து கொண்டனர். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

டெல்லி மற்றுமின்றி பல்வேறு நகரங்களிலும் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தநிலையில் சர்வதேச யோகா தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

டேராடூனில் பிரமாண்ட நிகழ்ச்சி

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் 55 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். சுமார் 1250 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் இந்த யோகாசன நிகழ்ச்சியில் பல்வேறு விதமான ஆசனங்கள் செய்யப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோ பதிவில் ‘‘யோகா என்பது உடலை சரியான முறையில் வைத்திருப்பதற்கான உடல் பயிற்சி மட்டுமல்ல. மாறாக, நமது உடல் நலம் சீராக இருப்பதற்கான பாஸ்போர்ட் ஆகும். நான்காவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக்க மக்கள் முன் வரவேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 8 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாநகராட்சி, மத்திய பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை சார்பில் தனித்தனியாக யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

யோகா தினத்தையொட்டி ‘Yoga Locator’ என்ற பெயரில் மொபைல் ஆப் ஒன்றை ஆயுஷ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் மூலம் தங்கள் பகுதியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகள் பற்றி விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்தியா மட்டுமின்றி 150 நாடுகளிலும் யோகா தினத்தையொட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x