Last Updated : 19 Jun, 2018 09:25 PM

 

Published : 19 Jun 2018 09:25 PM
Last Updated : 19 Jun 2018 09:25 PM

‘பொய்களை பேசித்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது’: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

பொய்களாகப் பேசித்தான் பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2014-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிவசேனா கட்சியின் 52-வது ஆண்டு விழா இன்று மும்பை புறநகரான கோரிகான் பகுதியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக ஏராளமான பொய்களைப் பேசியது. மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து அவர்களை நம்ப வைத்து தேர்தலில் வெற்றி பெற்றது. பொய்களைப் பேசித்தான், மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.

நாட்டில் எந்த சூழல் இருந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் பிரதமர் மோடி உலக நாடுகளைச் சுற்றுவதிலேயே ஆர்வமாக இருக்கிறார். ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் மோடி பயணம் செய்துவிட்டதால், இனிமேல் வேற்று கிரகத்துக்குத்தான் மோடி பயணிக்க வேண்டும். அதற்கும் அவர் தயாராக இருப்பார்.

ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சியுடன், பாஜக அமைத்திருந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. காஷ்மீரில் பாஜக ஆட்சியில் இருந்தும் இந்திய வீரர்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகாமல் தடுக்க முடிந்ததா? கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் 600 வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள பாஜக, பிடிபி அரசு எதற்கும் உதவாத அரசு. 3 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு, வீரர்களை பலிகொடுத்துவிட்டு, அதில் இருந்து கவனத்தை திசைதிருப்ப இன்று பிடிபி ஆட்சிக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்று இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரமலான் மாதத்தில் பாஜக அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவந்தது. தீவிரவாதத்துக்கும் மதத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறும்போது, எதற்காக போர்நிறுத்த ஒப்பந்தம் செய்கிறீர்கள். நம்முடைய விநாயகர் சதுர்த்திக்கும், தசரா பண்டிகைக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்கிறார்களா?

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x