Published : 19 Jun 2018 05:18 PM
Last Updated : 19 Jun 2018 05:18 PM

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி: உமர் அப்துல்லா வலியுறுத்தல்

காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி ராஜினாமா செய்துள்ள நிலையில் எந்தகட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் இருப்பதால் உடனடியாக ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீரில் முதல்வர் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணியில் கடும் மோதல் எழுந்த நிலையில், கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவதாக பாஜக இன்று அறிவித்தது. காஷ்மீரில் ஆளும் கூட்டணி அரசில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில், முதல்வர் மெஹபூபா முப்தி பதவி விலகினார். ஆளுநர் என்.என். வோராவை சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை அளித்தார்.

அம்மாநில அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், எதிர்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, ஆளுநர் என்.என். வோராவை இன்று மாலை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் ‘‘காஷ்மீரில் முதல்வர் மெஹபூபா முப்தி பதவி விலகியுள்ள நிலையில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை. ஆட்சி அமைப்பது தொடர்பாக நாங்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை; எங்களையும் யாரும் தொடர்பு கொள்ளவில்லை.

மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவது தான் தற்போது உள்ள ஒரே வழி. அதற்காக ஆளுநர் ஆட்சியை தொடரக்கூடாது. சட்டப்பேரவையை கலைத்துவிட்டு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். மத்திய அரசு கொல்லைபுறம் வழியாக ஆட்சியை தொடர நினைக்கக் கூடாது. மக்கள் தேர்ந்தெடுக்கும் கட்சி, அதன் பின் ஆட்சி அமைக்கும்.கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு எத்தனையோ முறை மெஹபூபா முப்திக்கு கூறினேன்.

ஆனால் பதவி ஆசையால் அவர் பாஜகவுடனான உறவை முறிக்கவில்லை. ஆனால் தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவைக் கூட பாஜக முறைப்படி மெஹபூபாவுக்கு தெரிவிக்கவில்லை. ஊடகங்கள் வாயிலாக தான் தெரிந்து கொண்டார். முன்பே அவர் வெளியேறி இருந்தால் இந்த அவமானத்தை அவர் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது. கெளரவத்துடன் அவர் வெளியேறி இருக்க வேண்டும். தற்போது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x