Published : 19 Jun 2018 03:12 PM
Last Updated : 19 Jun 2018 03:12 PM

காஷ்மீரில் திடீர் திருப்பம்: பிடிபியுடன் உறவு முறிந்தது; ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக

ஜம்மு - காஷ்மீரில் திடீர் திருப்பமாக முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான ஆளும் கூட்டணி அரசில் இருந்து பாஜக வெளியேறியது. இதனால் அங்கு மாநில அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் 2014-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 87 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸூக்கு 12 இடங்களும் கிடைத்தன. இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டு சிறிது காலம் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றது.

பின்னர் நேர் எதிர் கொள்கைகளை கொண்ட மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முன் வந்தன. மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் முப்தி முகமது சயீத் முதல்வராக பொறுப்பேற்றார். இருகட்சிகளுக்கும் இடையே பல முரண்பாடுகள் ஏற்பட்டாலும் நெருக்கடிக்கு இடையே கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

முப்தி முகமது சயீத் 2016-ம் ஆண்டு மரணமடைந்ததால் அவரது மகள் மெஹபூபா முப்தி முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின் இருகட்சிகளிடையேயான உறவு மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் கதுவா நகரில் 8 வயது முஸ்லிம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கும் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலை உருவாகியது.

குற்றச்செயல்களை மாநில அரசு சரியான முறையில் தடுக்கவில்லை என்ற புகார் கூறப்பட்டது. பாலியல் பலாத்கார வழக்கில் புகாருக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாக ஜம்மு நகரில் பேரணி நடைபெற்றது. இதில் பாஜக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இது ஆளும் கூட்டணிக்குள் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக தலைவர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதற்கு பதிலடியாக மக்கள் ஜனநாயக கட்சியினர் சிலர் தீவிரவாத அமைப்புகளுக்கு மறைமுகமாக ஆதரவு தருவதாக பாஜக புகார் கூறியது. மூத்த பத்திரிகையாளரும் ‘ரைசிங் காஷ்மீர்’ ஆசிரியரு மான ஷுஜாத் புகாரி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆளும் கூட்டணியில் இருந்து விலகியதாக பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘காஷ்மீரில் நாளுக்கு நாள் தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. பத்திரிக்கையாளர் ஷுஜாத் புகாரி கொல்லப்பட்டுள்ளார். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படை தீவிரப்படுத்த வேண்டும்.

இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது. காஷ்மீரில் எந்த வளர்ச்சி பணிகள் நடைபெற மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாநில அரசு மறுத்து வருகிறது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால்தான் மக்கள் ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம். இதே நிலை நீடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. எனவே கூட்டணியில் இருந்து வெளியே பாஜக முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். இங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினாலும் தீவிரவாதத்தை எதிர்த்து பாஜக போராடும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x