Last Updated : 19 Jun, 2018 02:28 PM

 

Published : 19 Jun 2018 02:28 PM
Last Updated : 19 Jun 2018 02:28 PM

பாதுகாப்பு அளிக்கிறோம் என கேஜ்ரிவால் உறுதியளிக்க வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை

டெல்லியில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் இருந்து முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், அரசும் குற்றம் சாட்டுகின்றன.

மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டுகிறது.

இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, கடந்த 8 நாட்களாக துணைநிலை ஆளுநர் இல்லத்தில் உள்ளிருப்புப் போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர்கள் இருந்து வருகிறார்கள்.

ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் தலையிட வேண்டும் எனக் கோரி மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதினார், அதற்கும் எந்தவிதமான பதிலும் இல்லை.

ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம், தாங்கள் எந்த வேலை நிறுத்தத்தையும் செய்யவில்லை, முதல்வர் கேஜ்ரிவால் கூறுவது தவறு என்று அவரின் குற்றச்சாட்டை மறுத்தனர்.

இதற்கிடையே உண்ணாவிரதத்தில் இருந்த துணை முதல்வர் மணிஷ் ஷிசிடியா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பியுள்ளார். விரைவில் அலுவலகப்பணியைத் தொடர்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே முதல்வர் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ''நான் ஐஏஎஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கறேன். என்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்துவிதமான பாதுகாப்பும் அளிக்கப்படும். இதேபோன்ற உறுதிமொழி இதற்கு முன்பும் அளித்திருந்தேன். இதை இப்போதும் வலியுறுத்துகிறேன்’’ எனத்தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அருணாச்சலம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமான ஐஏஎஸ் ஏஜிஎம்யுடி அமைப்பின் சார்பில் ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று ட்வீட் செய்தனர்.

அதில், ''முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக முறைப்படி அறிவிக்க வேண்டும். அந்த முறைப்படியான அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் எந்தவிதமான போராட்டமும் நடத்தவில்லை. வழக்கம் போல் பணியாற்றி வருகிறோம். டெல்லி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தலாம்'' எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே டெல்லி தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரிகள் துணை நிலை ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x