Published : 19 Jun 2018 01:32 PM
Last Updated : 19 Jun 2018 01:32 PM

’முஸ்லிம் ஊழியர் வேண்டாம்’: வாடிக்கையாளரையும், ஏர்டெல் நிறுவனத்தையும் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

பெண் வாடிக்கையாளர் ஒருவர் தனக்கு சேவையளிக்க முஸ்லிம் ஊழியர் வேண்டாம், இந்து ஊழியரை நியமனம் செய்யுங்கள் என்று கூறியதற்கு ஏர்டெல் நிறுவனம் சம்மதம் தெரிவித்தமைக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏர்டெல் நிறுவனத்தைக் கடுமையாக வசைபாடி, எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற்றது ஏர்டெல் நிறுவனம்.

ஏர்டெல் நிறுவனத்தில் டிடிஎச் சேவை பெற்றிருந்த டெல்லியைச் சேர்ந்த வாடிக்கையாளர் பூஜா சிங், ஏர்டெல் ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் ஏர்டெல் டிடிஎச் இணைப்பு குறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தில் பேசியபோது, ஒரு ஊழியர் தவறாக என்னிடம் பேசியதால், இனிமேல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவே பயமாக இருக்கிறது என்று பல்வேறு புகார்களை அடுக்கடுக்காகக் கூறி, அந்தச் சேவை மையத்தின் ஊழியர் பெயரையும் பதிவிட்டார்.

இதையடுத்து, பூஜா சிங்குக்கு உடனடியாக ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய சோயிப் என்ற ஏர்டெல் ஊழியர், ’’உங்களின் புகாரை நாங்கள் பதிவு செய்து கொண்டோம். எங்கள் கவனத்துக்கு இதுபோன்ற குறைகளை கொண்டு வந்ததற்கு நன்றி, விரைவில் இதைச் சரி செய்வோம். உங்களிடம் பேசியது சோயிப் நன்றி’’ என்று தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்து பூஜா சிங் ட்விட்டரில் பதிவிட்டார். ’’சோயிப், நீங்கள் ஒரு முஸ்லிம். நாங்கள் உங்களின் பணி விதிமுறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால், உங்கள் மதத்தின் புனித நூலில் வாடிக்கையாளர் சேவை குறித்து பல்வேறு முறைகள் இருக்கின்றன. எனக்கு ஒரு இந்துமதத்தைச் சேர்ந்த ஊழியர் சேவை அளிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன். நன்றி’’ எனத் தெரிவித்தார்.

 

இதையடுத்து, ஏர்டெல் நிறுவனத்தின் சார்பில் பூஜா சிங்குக்கு ட்வீட் செய்யப்பட்டது. அதில், ''பூஜா, உங்களுக்கு எந்த நேரத்தில், எந்த நாளில், உங்களுடன் பேச வேண்டும் என்று கூறினால், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தருகிறோம். உங்களைத் தொடர்பு கொள்ள செல்போன் எண் இருந்தால், தெரிவிக்கவும். நன்றி ககன்ஜோத்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதாவது, பூஜாசிங் வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் ஊழியரை மாற்றி, இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியரை அவருடன் பேச ஏற்பாடு செய்வதாக அறிவித்தது.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு எர்டெல் நிறுவனத்தைத் துளைத்தெடுத்தனர்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா ட்விட்டரில் கூறுகையில், ’’ஏர்டெல் நிறுவனத்துக்கு, நீங்கள், பூஜாசிங்குடன் நடத்திய உரையாடலைப் படித்தேன். உங்கள் நிறுவனத்துக்கு இனிமேல் ஒருபைசா கூட கட்டணம் செலுத்த நான் தயாராக இல்லை. நான் வைத்திருக்கும் ஏர்டெல் எண்ணையும், வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற்ற எம்என்பி செய்யப் போகிறேன், எனது வீட்டில் இருக்கும் ஏர்டெல் டிடிஎச் சேவையையும் அகற்றப் போகிறேன்’’ என்று காட்டமாகத் பதிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, ஊழியர்கள் அனைவரையும் சமமாக நடத்துவதை விடுத்து, வாடிக்கையாளர் கேட்டார் என்பதற்காக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஊழியருக்குப் பதிலாக இந்து ஊழியரை நியமிக்க ஒப்புக்கொண்டது எந்த விதத்தில் நியாயம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமல்லால், தங்களின் ஊழியரின் மரியாதையைக் காக்க, அந்த வாடிக்கையாளரின் சேவையை ஏர்டெல் நிறுவனம் ரத்து செய்து இருக்க வேண்டாமா என்றும் கேள்வி கேட்டனர்.

ஏறக்குறைய 5 மணி நேரத்துக்குப் பின், ஏர்டெல் நிறுவனம் தனது தவற்றை உணர்ந்து தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கியது. தனது ஊழியர் ககன்ஜோத் செய்த ட்வீட்டையும் நீக்கி மீண்டும் பூஜாவுக்குப் பதிவிட்டது.

’’பூஜா, எர்டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பார்ட்னர்கள் என யாரையும் நாங்கள் மதம், ஜாதி ஆகியவை பார்த்து தரம் பிரித்து, வேறுபாட்டுடன் நடத்துவதில்லை. உங்களையும் அப்படித்தான் நடத்தினோம். உங்களிடம் பேசிய சோயிப், ககன்ஜோத் இருவரும் எங்களின் ஊழியர்கள்தான். எங்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் சேவை தொடர்பாக அழைக்கும் போது, முதலில் யாருக்கு அழைப்பு கிடைக்கிறதோ அந்த ஊழியர்தான் எடுத்து பதில் அளிப்பார். ஆனால், உங்களின் கோரிக்கைக்கு ஏதேனும் பதில் கிடைத்தால் தெரிவிக்கிறோம். நன்றி ஹிமான்சு’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் வரவேற்றனர். ஏர்டெல் நிறுவன நெட்டிசன்களிடம் இழந்த மரியாதையைச் சிலமணி நேரங்களில் மீண்டும் பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x