Published : 18 Jun 2018 09:13 AM
Last Updated : 18 Jun 2018 09:13 AM

காஷ்மீர் விவகாரத்தில் மோடி அரசு தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவண் கெரா டெல்லியில் நேற்று கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். ஆனால் காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சாட்டி ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையை அவரால் முன்கூட்டியே தடுக்க முடியவில்லை.

அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது. காஷ்மீரில் மதவாத அரசியலை பாஜக புகுத்தியிருப்பதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. 1990-க்குப் பிறகு தற்போது காஷ்மீரில் வன்முறை, கலவரங்கள், தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த 27 நாட்களில் மட்டும் 57 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது. வெளியுறவு கொள்கைகளிலும் மோடி அரசு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

காஷ்மீரின் கதுவா பலாத்கார சம்பவத்தால் சர்வதேச அளவில் இந்தியாவின் நன்மதிப்பு குறைந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக மதரீதியாக அரசியல் செய்து வருகிறது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிப்பது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x