Last Updated : 15 Jun, 2018 08:50 AM

 

Published : 15 Jun 2018 08:50 AM
Last Updated : 15 Jun 2018 08:50 AM

நிதி நெருக்கடியில் தள்ளாடும் காங்கிரஸ்: கட்சியினர் கைவிட்டதால் பொதுமக்களிடம் நிதி திரட்ட முடிவு

பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் தற்போது நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது. இதை சமாளிப்பதற்காக, பொதுமக்களிடம் நிதி திரட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது.

தேர்தல் நெருங்கும்போது நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்ப, கட்சிகளின் நிதி நிலைமையிலும் மாற்றம் ஏற்படுவது வழக்கம். எனினும், இது தேசிய கட்சிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. இப்போது காங்கிரஸ் கட்சி முதன்முறையாக நிதிப் பற்றாக்குறையால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் இறுதியிலேயே இந்தப் பிரச்சினை தொடங்கிவிட்டது. அதாவது, சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை தங்கள் நன்கொடையை பாஜகவின் பக்கம் திருப்பியுள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சியின் கஜானா காலியாகும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனால், கட்சி நிதியாக ரூ.50,000 முதல் ஒரு லட்சம் வரை எவ்வளவு வேண்டுமானாலும் வழங்குமாறு தனது கட்சிக்காரர்களிடம் குறிப்பாக முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏ மற்றும் எம்பிக்களிடம் காங்கிரஸ் கேட்டிருந்தது.

அவர்கள் கைவிரித்துவிட, பதவியில் இருப்பவர்களிடமிருந்து மட்டும் சில லட்சங்கள் கிடைத்தன. இந்த நிதியை வைத்து ஓரளவுக்கு சமாளித்து வந்த காங்கிரஸ் கட்சியின் நிலை, மீண்டும் மோசமடைந்து விட்டது. எனவே, கட்சிக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டுவது என்று அக்கட்சியின் புதிய தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

டெல்லி முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், புதிதாக ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியபோது பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் நிதி உதவி குவிந்தது. இதே பாணியை நாமும் கடைப்பிடிக்கலாம் என ராகுல் கருதுகிறார்.

இதுகுறித்து காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “வழக்கமாக பொதுத்தேர்தல் நேரத்தில், பெரு நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடையின் அளவை வைத்தே தேர்தல் முடிவை ஓரளவுக்கு கணித்து விடலாம். ஆனால், இந்த முறை, எந்த கட்சிக்கும் நன்கொடை வழங்காமல் பெரு நிறுவனங்கள் அமைதி காத்து வருகின்றன. இந்த அமைதி கலைவதற்குள், எங்கள் நிதி நிலை மேலும் மோசமாகிவிடும் போல் தெரிகிறது. எனவே பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்வதுதான் ஒரே வழி என்றாகி விட்டது” என்றனர்.

மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து, அக்கட்சிக்கான நன்கொடை வேகமாக அதிகரித்தது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி பாஜகவின் நன்கொடை 81 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் நன்கொடை 14 சதவீதம் குறைந்துவிட்டது.

இதனால், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x