Last Updated : 14 Jun, 2018 09:17 PM

 

Published : 14 Jun 2018 09:17 PM
Last Updated : 14 Jun 2018 09:17 PM

ஸ்ரீநகரில் ‘ரைஸிங் காஷ்மீர்’ நாளேட்டின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி மர்மநபர்களால் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் ரைஸிங் காஷ்மீர் நாளேட்டின் ஆசிரியரும், தி இந்து(ஆங்கிலம்) நாளேட்டின் முன்னாள் செய்தியாளருமான ஷுஜாத் புகாரி மர்மநபர்களால் இன்று அலுவலகத்துக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து இன்று மாலை வெளியே வந்த ஷுஜாத் புகாரி, லால் சவுக்கில் நடைபெறும் இப்தார் விருந்துக்கு காரில் புறப்பட்டார். அப்போது, காரில் புகாரி, அவரின் கார் டிரைவர், தனிப்பாதுகாவலர் ஒருவரும் இருந்தனர்.

அப்போது பைக்கில் வந்த மர்மநபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினார்கள். இதில் நாளேட்டின் ஆசிரியர் புகார், அவரின் தனிப் பாதுகாவலர், டிரைவர் ஆகியோர் மீதும் துப்பாக்கிக் கண்டு பாய்ந்தது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக 3 பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், இதில் புகாரி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ரம்ஜான் பண்டிகை நாளைக் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், திடீரென புகாரி சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ரமலான் மாதத்தில் பாதுகாப்பு படையினரால் கொண்டுவரப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்த ஆலோசனையில் புகாரி தீவிரமாக ஈடுபட்டு வந்தநிலையிலும், இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் நடப்பதால், அங்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பு முதல் முறையாக இன்று அறிக்கை வெளியிட்ட நிலையில், நாளேட்டின் ஆசிரியர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் எத்தனைபேர் ஈடுபட்டார்கள் என்பது தெரியவில்லை. இந்த நாளேட்டின் ஆசிரியராகச் செயல்படுவதற்கு முன் தி இந்து நாளேட்டின்(ஆங்கிலம்) சிறப்பு நிருபராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷுஜாத் புகாரி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி கேட்டு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், ஷுஜாத் புகாரி கொல்லப்பட்ட செய்தி கேட்டு வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். ரமலான் பண்டிகைக்கு முன் தீவிரவாதம் அதன் கோரமுகத்தை காட்டியுள்ளது. ஷுஜாத் புகாரியை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்சிங் ட்விட்டரில்விடுத்த செய்தியில், ரைஸிங் காஷ்மீர் நாளேட்டின் ஆசிரியர் புகாரி கொல்லப்பட்டது கோழைத்தனம். காஷ்மீரின் குரலை ஒடுக்குவதற்கான முயற்சி. மிகவும் துணிச்சலான, அச்சமில்லாமல் பணியாற்றக்கூடிய பத்திரிகையாளர் புகாரி. அவரைச் சுட்டுக்கொன்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x